சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 


ஆந்திர மாநிலத்தில் உள்ள  நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் பின்னால் இரும்பு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோத முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுக்கும் பொருட்டு அந்த லாரியை டிரைவர் திருப்பிய போது அது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது.


இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். உடனடியாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் மாவட்ட அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா அடிப்படையில் போலீசார் விபத்து குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.