திமிரு படத்தில் முதலில் ஸ்ரேயா ரெட்டியை நடிக்க வைக்க வேண்டாம் என நடிகர் விஷால் சொன்னதாக இயக்குநர் தருண் கோபி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 2006 ஆம் ஆண்டு தருண் கோபி அறிமுக இயக்குநராக இயக்கிய படம் ‘திமிரு’. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க, ரீமாசென் ஹீரோயினாக நடித்தார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயா ரெட்டி, வடிவேலு, விநாயகன் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் நடிகை கிரண் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். ஆக்‌ஷன் படமாக உருவான திமிரு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று விஷால் கேரியரில் சிறப்பான வெற்றியை கொடுத்தது. 


இந்த படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் வில்லியாக ஸ்ரேயா ரெட்டி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது கேரக்டர் தான் படமே என்ற நிலையில் இன்றளவும் பேசப்படும் கேரக்டராக மாறியே விட்டது. இப்படியான நிலையில் இந்த படத்தை விஷாலில் தந்தை ஜி.கே.ரெட்டி தான் தயாரித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தான் ஸ்ரேயா ரெட்டிக்கும், விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கு இடையே காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. 


ஆனால் இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியை நடிக்க வைக்க வேண்டாம் என விஷால் தெரிவித்ததாக நேர்காணல் ஒன்றில் தருண்கோபி கூறியிருந்தார். அதில் பேசிய அவர், ”விஷால் ஸ்ரேயா ரெட்டி இந்த படத்தில் வேண்டாம் என சொன்னார்கள். காரணம் அந்த பெண் கேரக்டர் தான் உங்களை இயக்குநராக மாற்றுகிறது. அதனால் மல்லிகா ஷெராவத், பிபாசா பாஷூ, சிம்ரன் ஆகியோரை போடலாம் என நினைக்கிறோம். அவர்களும் ரீ எண்ட்ரீ கொடுத்த மாதிரி இருக்கும் என சொன்னார்கள். ஆனால் நான், ஸ்ரேயா ரெட்டி இந்த கேரக்டர் பண்ண வேண்டாம் என்றால் படமே வேண்டாம் என சொல்லி விட்டேன். சரி உங்க இஷ்டம் என சொன்னார்கள்.


நான் ஸ்ரேயா ரெட்டியை சந்தித்து கதையை சொன்னேன். சூப்பர் என சொல்லிவிட்டு ஹீரோ யார் என கேட்டார்கள். அப்போது சண்டகோழி ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் சன் டிவியில் நட்சத்திர கிரிக்கெட் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அதில் விஷால் பந்து வீசி விக்கெட்  எடுத்தார். அவரை காட்டவும், அந்த கருப்பாக இருக்கிறாரே அவரா? என ஸ்ரேயா ரெட்டி கேட்டார். நான் ஆமாம் என சொல்லிவிட்டு சண்டகோழி படம் வெளியாகி சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது என தெரிவித்தேன். இப்படித்தான் ஸ்ரேயா ரெட்டி திமிரு படத்துக்குள் வந்தார் என தருண்கோபி கூறியிருந்தார். 




மேலும் படிக்க: Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!