குற்றம் கடிதல்


மாஸ்டர் அஜய் , ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், பாவேல் நவகீதன் உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான திரைப்படம் 'குற்றம் கடிதல்'.  பிரம்மா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சங்கர் ரெங்கராஜன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.


கதை


மெர்லின் மற்றும் மணிகண்டன் காதலித்து தங்களது வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்கிறார்கள். கிறித்தவக் குடும்பத்தை சேர்ந்தவர் மெர்லின். இந்து மதப் பின்னணியில் இருந்து வருபவர் மணிகண்டன். மெர்லின் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். அதே பள்ளியில் படித்து வருகிறான் செழியன் என்கிற சுட்டியான பையன். விபத்து ஒன்றில் தனது தந்தையை இழந்துவிடும் செழியன் தனது அம்மாவின் கவனிப்பில் வளர்கிறான். மேலும் செழியனின் தாய்மாமா (பாவெல் நவகீதன்) சமூக செயல்பாட்டாளராக இருக்கிறார்.


தன்னுடன் படிக்கும் மாணவிக்கு செழியன் முத்தம் குடுத்துவிட, அதைக் கேட்கும் மெர்லினிடம் விளையாட்டாக அவன் சொல்லும் பதில் மெர்லினைக் கோபப்படுத்துகிறது. கோபத்தில் மெர்லின் செழியனை அடிக்க, அவன் தரையில் மயங்கி விழுகிறான்.


பிரச்னை பெரிதாக மாற பள்ளியின் தலைமை ஆசிரியர் மெர்லின் மற்றும் அவனது கணவனை சில நாட்கள் ஊரை விட்டு வெளியே தங்கி இருக்க சொல்கிறார். தான் செய்துவிட்ட குற்றத்தில் இருந்து ஓட மனம் இல்லாமல் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்கிறார் மெர்லின். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதையாகும். 


தேசிய விருது பெற்ற படம் 


2015ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது வென்றது குற்றம் கடிதல் திரைப்படம். தீவிரமான ஒரு நாடகத்தில் மூலம் சமகாலத்திய கல்வி முறையில் இருக்கும் சிக்கல்களை கேள்விக்குட்படுத்தியது. இளம் வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்கள் சொல்லிக் குடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. மேலும் மதம் மறுத்து திருமணம் செய்துகொள்ளும் மெர்லினின் மனம் சஞ்சலங்களுக்கு உள்ளாவதை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர் பிரம்மா.


மையக்கதையைத் தவிர்த்து பல்வேறு சமூக விமர்சனங்களை தனது வசனங்களில் வெளிப்படுத்தி இருந்தார் இயக்குநர். ஒவ்வொரு காட்சியையும் ஏதோ ஒரு வகையில் புதிய முறையில் சொல்ல முயற்சிக்கும் இயக்குநரின் பிரயத்தனம் தெரிந்தாலும் சில இடங்களில் படத்தின் ஓட்டத்தில் பொருந்தாமல் இருந்தது.  தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு படைப்பாக 8 ஆண்டுகளுக்குப் பிறகும் குற்றம் கடிதல்  இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது இப்படத்தை மறக்காமல் பாருங்கள்..!




மேலும் படிக்க: 9 Vande Bharat Train: சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!