இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.


இந்தியா - ஆஸ்திரேலியா:


அடுத்த மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரண்டாவது போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்18 அலைவரிசயிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.


எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் போட்டி:


தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை வகிக்கும் இந்தியா, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதோடு, ஐசிசியின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, அதனை மேலும் வலுவாக பற்றிக்கொள்ள ஆர்வம் காட்டுகிறது. அதேநேரம், 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க தீவிரம் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.


இந்திய அணியின் நிலவரம்:


உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோகித், கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால், கே.எல். ராகுல் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். முதல் போட்டியில் ஷமியின் அபார பந்து வீச்சும், அவருக்கு உறுதுணையாக பும்ரா, ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் செயல்பட்ட விதமும் பவுலிங் யூனிட்டிற்கு நம்பிக்கை அளிக்கிறது. பேட்டிங்கிலும் கில், கெய்க்வாட், கே.எல். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் என அனைத்து டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்தனர். அதேபோன்று இன்றைய போட்டியிலும் செயல்பட்டால், இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி.


ஆஸ்திரேலிய அணி நிலவரம்:


இதனிடையே, தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு போட்டிகளில் வென்றாலும், அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வியுற்று ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை இழந்தது. அதோடு, இந்திய பயணத்திலும் தனது முதல் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பினால், இந்திய அணியின் வெற்றியை அவர்கள் தட்டி பறிக்க வாய்ப்புள்ளது.


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட்/இஷான் கிஷன், 2 ஷுப்மான் கில், 3 ஷ்ரேயாஸ் ஐயர், 4 சூர்யகுமார் யாதவ், 5 KL ராகுல், 6 ரவீந்திர ஜடேஜா, 7 வாஷிங்டன் சுந்தர், 8. அஷ்வின், 9 ஷர்துல் தாக்கூர், 10. முகமது ஷமி, 11 முகமது சிராஜ்/ஜஸ்பிரித் பும்ரா.


ஆஸ்திரேலியா: 1 டேவிட் வார்னர், 2 மிட்செல் மார்ஷ், 3 ஸ்டீவன் ஸ்மித், 4 மார்னஸ் லாபுசாக்னே, 5 கேமரூன் கிரீன், 6 அலெக்ஸ் கேரி, 7 ஜோஷ் இங்கிலிஸ்/ஆரோன் ஹார்டி, 8 பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 9 சீன் அபோட், 10 ஆடம் ஜம்பா , 11 ஜோஷ் ஹேசில்வுட்.