11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


ஒன்பது ரயில்கள் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் விரைவான சேவையை வழங்குவதற்காகவே நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


வீடியோ கான்பரன்சிங் மூலம் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


புதிதாக இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில்கள்  உதய்பூரில் இருந்து ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை வரை இயக்கப்படவுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு வரையும் ஒரு வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. 


இத்துடன் விஜயவாடாவில் இருந்து ரேணிகுண்டா வழியாக சென்னை வரையில் மற்றொரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் பாட்னாவில் இருந்து ஹவுரா வரையும், கேரள மாநிலத்தின் காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரையிலும்,  ரூர்கேலா முதல் புவனேஸ்வர் வழியாக பூரி வரையிலும்,  ராஞ்சியில் இருந்து ஹவுரா வரையிலும் மற்றும் ஜாம்நகர் முதல் அகமதாபாத் வரையிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 


இந்த ரயில்கள், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குதல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு படியாகும் என்று  ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




"வந்தே பாரத் ரயில்களைப் பொறுத்தவரையில் இயக்கத்தின் வழித்தடங்களில் வேகமான ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும்" என்று வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் ஆகிய வழித்தடத்தில் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது, ​​வந்தே பாரத் ரயில்கள் அந்தந்த இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை சுமார் மூன்று மணிநேரம் குறைக்கும் எனத் தெரியவருகிறது. அதேபோல்,  ஹைதராபாத் - பெங்களூரு 2.5 மணி நேரத்திற்கும் மேலாக; திருநெல்வேலி-மதுரை-சென்னை இடையே  எக்ஸ்பிரஸ் ரயில்களைக் காட்டிலும் 2 மணி நேரத்திற்கும் முன்னதாக வந்தே பாரத் ரயில்கள் வந்து விடுகின்றன. 


ராஞ்சி - ஹவுரா மற்றும் பாட்னா - ஹவுரா மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் இடையேயான பயண நேரம், இந்த இடங்களுக்கு இடையே தற்போது இயங்கிவரும் அதிவேக ரயில்களுடன் ஒப்பிடும் போது, ​​ஒரு மணிநேரம் குறையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




உதய்பூர் - ஜெய்ப்பூர் இடையிலான பயண நேரம் சுமார் அரை மணி நேரம் குறையும் என தெரியவருகிறது. 


ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி மற்றும் திருநெல்வேலி-மதுரை-சென்னை ரயில்கள் வழித்தடங்களில் முக்கிய வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கிறது. 


மேலும், விஜயவாடா - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், ரேணிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு, திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இயக்கப்படவுள்ளது


கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரயில்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதற்கான முக்கிய முயற்சியாக இருக்கும் என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.