வாழ்க்கையில் தானும் தற்கொலை செய்துக் கொள்ள நினைத்ததாக நடிகர் கமல்ஹாசன் மாணவர்களிடையே நடைபெற்ற உரையாடலின் போது தெரிவித்துள்ளார். 


மாணவர்களுடனான கலந்துரையாடல் 


சென்னை லோயலோ கல்லூரியில் அரசியல் விழிப்புணவு தொடர்பாக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, மாணவ - மாணவிகள் பல கேள்விகளை எழுப்பி அவரின் கருத்துகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் தனக்கு தோன்றிய தற்கொலை எண்ணம் மறைந்தது பற்றியும் பேசியுள்ளார். 


வாழ்க்கைக்கு பணம் எந்த அளவுக்கு முக்கியம்? என்ற கேள்வி முதலில் அவரிடம் எழுப்பப்படது. அதற்கு என்னோட 15, 16 வயதுல பணம் இல்லாமல் ஒரு 6 மாதம் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கேன். ஆனால் மூச்சு இல்லாமல் ஒரு 40 செகண்ட், ஒரு நிமிஷம் தாங்கும். தண்ணி இல்லாமல் ஒரு வாரம் தாங்கலாம். சாப்பாடு இல்லாமல் ஒரு 10, 12 நாள் தாங்கும். அதைவிட பணம் எப்படி முக்கியமாக போகும். அது ஒரு பேசா மடந்தை. ஒரு கருவி அவ்வளவு தான் என கமல் பதில் கூறினார். 


தற்கொலை எண்ணத்தை தடுப்பது எப்படி?


தொடர்ந்து பேசிய அவர், ’மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள். இதனை தடுக்க உங்கள் அறிவுரை என்ன?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘தோல்வி படம் எடுக்காமல் இருப்பது எப்படி? என்று என்னிடம் கேட்பது போல இருக்கிறது. அதுவும் முயற்சி செய்திருக்கேன். 20,21 வயதாக இருக்கும்போது தற்கொலை செய்துக் கொள்ளவும் யோசித்திருக்கிறேன். 


நமக்கு நம்மை பற்றிய அதீத கற்பனை ரொம்ப இருக்கும். அப்படியான நிலையில் என்னை சினிமா உலகமும், கலை உலகமும் மதிக்கவே மாட்டேங்குது. நான் செத்துப் போனா தான் தெரியும் என நினைத்து என் குரு ஆனந்து என்பவருடன் ஆலோசனையும் செய்துள்ளேன். அவர் தான் நேரம் வரும், பொறுமையாக இருக்க வேண்டும் என சொன்னார். அதனால் அறிவுரை செய்வதற்கு எனக்கு தகுதி இல்லை. 


மறைந்த நடிகர் சோ இதைப்பற்றி ஒரு கருத்து தெரிவித்தார். அதன்படி, ‘ஒரு தொப்புள்க்கொடி குழந்தையை நீ கொல்ல நினைப்பாயா? என கேட்டார். நான் அது எப்படி சார்.. அது அடுத்த வீட்டுக்குழந்தையாச்சே என பதில் சொன்னேன். அதற்கு அப்புறம் எதுக்கு உங்க அப்பாவின் பிள்ளையாகிய உன்னை நீ கொல்ல நினைக்கிறாய்? என கேள்வி கேட்டார். இதைவிட சிறந்த அறிவுரை என்னவாக இருக்கப் போகிறது. தற்கொலை செய்வது ஒரு குற்றம் அதனை செய்யாதீர்கள். 


இருள் எப்பவும் உங்களுடனே இருக்காது. வெயில் வந்து தான் தீரும். அதேபோல் தான் வாழ்க்கையில் பொறுமை வேண்டும். அப்துல்கலாம் சொன்னதுபோல உங்களை தூங்க விடாமல் செய்யும் கனவுகள் இத்தகைய எண்ணங்கள் வராமல் தடுக்கும். உங்களுடைய வாழ்நாளில் என்ன செய்யலாம் என திட்டமிடுங்கள். அதன்படி நடக்கவில்லை என்றால் பிளான் பி-யை கையில் எடுங்கள். மரணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி தான். மரணமில்லா வாழ்க்கை என்பது ஒரு முற்றுப்பெறாத செயல் போன்றது என்பதால் நாம் மரணிப்பது உறுதி. ஆனால் அதனை முன்கூட்டியே நீங்களே வரவழைக்காதீர்கள். இதுதான் என்னுடைய அறிவுரை என கமல்ஹாசன் கூறினார். 




மேலும் படிக்க: மியூசிக் ஆல்பத்தில் ஒன்றாக கலக்க தயாராகும் கமல் - ஸ்ருதிஹாசன்: ரசிகரகள் ஹேப்பி