இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) மிகவும் புகழ்பெற்ற பண்டிகை ஆகும். சமீபமாக சில ஆண்டுகளாக வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.


நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் ஆகஸ்ட் 26ம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, வட இந்தியாவில் தற்போது முதலே கிருஷ்ண ஜெயந்திக்கான கொண்டாட்டம் தொடங்கி விட்டது.


ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளிலே கிருஷ்ணர் அவதரித்ததாக கருதப்படுகிறது. இதனால், அன்றைய தினமே ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) கொண்டாடப்படுகிறது.


வழிபடுவது எப்படி?


கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுவதால் கிருஷ்ண ஜெயந்தி எப்போதும் மாலை நேரத்திலே கொண்டாடப்படுகிறது. காலையிலே எழுந்து நீராட வேண்டும். பின்னர், கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருக்க விரும்பும் பக்தர்கள் விரதம் இருக்கலாம். 3 நாழிகை ( ஒரு நாழிகை 24 நிமிடங்கள்) விரதம் இருப்பது சிறப்பாகும். இவ்வாறு 3 நாழிகை விரதம் இருப்பதால் 3 ஜென்ம பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை ஆகும். விரதம் இருக்க இயலாதவர்கள் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.



  • கிருஷ்ணரின் புகைப்படம் அல்லது சிலை ஏதேனும் ஒன்றை பூஜையறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • கிருஷ்ணரின் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும்.

  • சிலர் களிமண்ணால் ஆன கிருஷ்ணரின் சிலையையும் பயன்படுத்துவார்கள்.

  • கிருஷ்ணரின் படத்திற்கு அல்லது சிலைக்கு முன்பு வாழை இலையை இட வேண்டும்.

  • அதில் அரசியை பரப்ப வேண்டும். பின்னர், வெண்கல குடத்தால் ஆன கலசத்தை வைக்க வேண்டும்.


( வெண்கல குடத்தின் உள்ளே நீரை நிரப்பி, அதன் மீது தேங்காயும் தேங்காயைச் சுற்றி மாவிலை வைத்தால் கலசம் தயார். அதற்கும் சந்தனம், குங்குமம், விபூதி வைக்க வேண்டும்)



  • இப்போது, கலசத்தின் வலதுபுறம் மஞ்சளால் ஆன பிள்ளையாரைப் பிடித்து வைக்க வேண்டும்.

  • வாழை இலையில் கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, முறுக்கு உள்பட பலகாரங்களை வைக்க வேண்டும். மேலும், பழங்கள் வைப்பதும் சிறந்தது ஆகும்.

  • பூஜையைத் தொடங்குவதற்கு முன்பு நெய் விளக்கேற்ற வேண்டும்.

  • பின்னர், தீபாராதனை காட்டி கிருஷ்ணரை வழிபட வேண்டும்.


குட்டி கிருஷ்ணர், குட்டி ராதை:


பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி என்றாலே வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும், ராதை வேடமிட்டும் பெற்றோர்கள் அழகு பார்ப்பார்கள். கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளின் பாதங்களை அரிசி மாவில் வைத்து வீட்டில் குழந்தையை நடக்க வைத்து அழகு பார்ப்பார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் கிருஷ்ணர் வீட்டில் உலா வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் அழகு பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.


ALSO READ | Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி! தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயில்கள் இவைதான்!