தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ. 100 மதிப்பிலான கருணாநிதி நினைவு நாணயம் நேற்று (ஆக.18) வெளியிடப்பட்டது. இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை 6. 50 மணியளவில் தொடங்கி, நடைபெற்றறது.


கலைஞர் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிலையில், கலைஞர் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 


இந்த நிலையில் விழா குறித்து இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’கருணாநிதி பற்றி ராஜ்நாத் சிங் உள்ளத்தில் இருந்து பேசினார். அதனாலேயே திமுககாரரைவிட, பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார். கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் போல, ராஜ்நாத் சிங் பேசினார். விழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் எனக்கு உறக்கமே வரவில்லை.


பாஜகவுடன் ரகசிய உறவு இல்லை


அதே நேரத்தில் நமக்கு பாஜகவுடன் ரகசிய உறவு எதற்கும் அவசியம் இல்லை. நம் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அண்ணா மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.


எடப்பாடி பழனிசாமி போல, ஊர்ந்துசென்று பதவி வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஆதரித்தாலும் எதிர்த்தாலும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம்’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.