இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தியும்(Krishna Jayanthi) ஒன்றாகும். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும், ராதை வேடமிட்டும் பெற்றோர்கள் அழகு பார்ப்பார்கள்.  கிருஷ்ண ஜெயந்தி வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.


கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ தலங்களிலும் கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் வைணவ தலங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகள் செய்யப்படுவது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில்களை காணலாம்.


மயிலாப்பூர் பார்த்தசாரதி கோயில்:


சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது பார்த்தசாரதி கோயில். சென்னையில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோயில்களில் மிகவும் முக்கியமான கோயில் இதுவாகும். கிருஷ்ண ஜெயந்தி இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.


திருவானைக்காவல் கோகுல கிருஷ்ணன் கோயில்:


திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவானைக்காவல். இங்கு அமைந்துள்ளது கோகுல கிருஷ்ணன் கோயில். இங்கு வேணுகோபால சுவாமியாக பெருமாள் காட்சி தருகிறார்.  இந்த கோயில் மிகவும் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இங்கு புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் கருவறையில் காட்சி தருகிறார்.


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில்:


தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடி. இங்கு அமைந்துள்ளது ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில். மிகவும் புகழ்பெற்ற வைணவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு திருமால் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக காட்சி தருகிறார்.


வேப்பங்கொண்ட பாளையம் ஸ்ரீகிருஷ்ணன் கோயில்:


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், சோளிங்கரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள வேப்பங்கொண்டபாளையம். குழந்தை வரம் தரும கோயிலாக வேப்பங்கொண்டபாளையத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் உள்ளது.


மயிலாடி கிருஷ்ணன் கோயில்:


ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது மயிலாடு கிராமம். இங்கு அமைந்துள்ள கிருஷ்ணன் கோயில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இங்குள்ள கிருஷ்ணருக்கு வெண்ணெய், சர்க்கரைப் பொங்கல், அவல் படைக்கப்படுகிறது, கிருஷ்ண ஜெயந்தி இந்த கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.


மதுரை நவநீதி கிருஷ்ணன் கோயில்:


மதுரை வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது நவநீதி கிருஷ்ணன் கோயில். நூறாண்டுகள் பழமையான இந்த கோயில் மதுரையில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோயிலுக்கு கம்பத்தடி கிருஷ்ணன் கோயில் என்றும், வடக்கு கிருஷ்ணன் கோயில் என்றும் பெயர் உள்ளது. இங்கு சத்தியபாமா மற்றும் ருக்மணியுடன் கிருஷ்ணர் காட்சி தருகிறார். குருவாயூர் கோயிலுக்கு நிகரான புகழுடன் இந்த கோயில் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வடசேரி கிருஷ்ணன் கோயில்:


நாகர்கோயிலில் உள்ளது வட சேரி. இங்கு அமைந்துள்ள கிராமம் கிருஷ்ணன் கோயில். ஆதித்தவர்மனால் கட்டப்பட்டுள்ள இந்த கிருஷ்ணன் கோயிலின் பெயரிலே இந்த ஊர் பெயர் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இரவு பூஜையில் கிருஷ்ணனை தாலாட்டி பாடி தூங்க வைக்கும் வைபவம் இங்கு நடப்பது தனிச்சிறப்பு ஆகும்.


இந்த கோயில்கள் மட்டுமின்றி புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், சோளிங்கர் நரசிம்ம பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.