தென்னிந்தியாவை மையப்படுத்தி 'தெற்கின் எழுச்சி' என்கிற தலைப்பின் கீழ் “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு நேற்று சென்னையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நடிகர் ராணா டகுபதி, நடிகை ரேவதி, நடிகை குஷ்பு உள்பட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுஹாசினி தனது சினிமா அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுஹாசினி, தனது கணவர் மற்றும் மணிரத்னம் இயக்க இருக்கும் KH234 படம் குறித்தான ஒரு சின்ன அப்டேட்டை பகிர்ந்துகொண்டார்.
மனிரத்னம் ஃபேமிலியில் இருக்கப் போகிறேன் என்று எதிர்பார்க்கவில்லை!
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு சுஹாசினியின் கணவர் மணிரத்னம் மற்றும் அவரது சித்தப்பா கமல்ஹாசனும் இணைய இருப்பது குறித்து தன்னுடைய கருத்தைக் கேட்டபோது சுஹாசினி அளித்த பதில்:
“கமலுடைய எத்தனையோ படங்களை நான் பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக எனக்கு அவர் நடித்த நாயகன் படம்தான் அதிகம் பிடித்த படம். நாயகன் படம் பார்த்தபோது நான் மணிரத்னம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கப் போகிறேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் இந்த முறை கமல் மற்றும் மணி மீண்டும் இணைவதை நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்”
விரைவில் ஷூட்டிங்
சுஹாசினியிடம் படம் பற்றி ஏதாவது அப்டேட்களை மணிரத்னம் பழகிக் கொள்வாரா என்று சுஹாசினியிடம் கேட்டபோது “ படம் பற்றி ஏதாவது சொன்னால் நான் அதை வெளியில் சொல்லிவிடுவேன் என்பதனால் மணிரத்னம் என்னிடம் படம் பற்றி பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் படம் தொடர்பான ஒரு சின்ன படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது” என்று சுஹாசினி தெரிவித்தார்.
என்னுடைய படங்களுக்கு ஆலோசனை கொடுப்பார்
நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் வலம் வருபவர் சுஹாசினி அதுவும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குநரின் இணையாக இருக்கும் சுஹாசினி தன்னுடைய படங்கள் குறித்து தனது கணவரிடம் ஆலோசனை கேட்பாரா என்கிற கேள்விக்கு அளித்த பதில்:
“ நான் எழுதும் திரைக்கதைகளை அவரிடம் படிக்க கொடுப்பேன். அதை படித்தபின் அதில் அவருக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் மணிரத்னம் ஆலோசனை கூறுவார். ஆனால் படமாக எடுக்கப்பட்டபின் அதில் அவர் தலையிட மாட்டார்”
KH234
உலக நாயகன் கமல்ஹாசனின் 234ஆவது படத்தை இயக்க இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைய இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் நடிகர் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Suhasini: “திரைப்படத்தில் பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் இதைதான் செய்கிறார்கள்” - மனம் திறந்த சுஹாசினி