தற்போது உள்ள தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் சாதி ஒடுக்குமுறை குறித்து பேசுவதாக நடிகையும், இயக்குனருமான சுஹாசினி(Suhasini) தெரிவித்துள்ளார். 


தென்னிந்தியாவை மையப்படுத்தி தெற்கின் எழுச்சி என்ற பெயரில் “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு தற்போது சென்னையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நடிகர் ராணா டகுபதி, நடிகை ரேவதி, நடிகை குஷ்பு உள்பட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஹாசினி தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 


சுஹாசினி(Suhasini) பேசுகையில், ”1985ம் ஆண்டு ரிலீசான சிந்து பைரவி, கணவரை சார்ந்து இல்லாத ஒரு மனைவி குறித்து தைரியமாக பேசும் படமாக சிந்து  இருந்தது. நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதைதான் சிந்து பைரவி படம் பேசியது. சிந்து பைரவி படத்தை போல் தெலுங்கில் ஸ்வாதி என்ற படத்தில் நடித்தேன். நான் அதில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்தேன். அந்த படத்தில் கணவனை பிரிந்த எனது அம்மாவுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கும் கேரக்டரில் நடித்திருந்தேன். 


தற்போது உள்ள சினிமாவில் சாதி ஒடுக்குமுறை பற்றி பேசப்படுகிறது. ஆனால், நான் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சாதி ஒடுக்குமுறையை தூரத்தில் இருந்தே பார்த்து வந்தேன். தற்போது பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சாதி ஒடுக்குமுறை குறித்து திரைப்படத்தில் பேசுகின்றனர். அந்த கால படங்களில் சாதி ஒடுக்குமுறை இருந்ததை நினைத்து தற்போது வருத்தப்படுகிறேன்” என்றார்.


மணி ரத்னத்தின் மனைவியாக இருப்பது முழு நேர பணியாக இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சுஹாசினி, ”மணிரத்னத்திற்கு முழு நேர மனைவியாக இல்லை. மனைவியா, அம்மாவாக, எனக்கான வேலைக்கும் இருக்க 24 மணி நேரம் போதவில்லை. 20 வயதில் நான் ரொம்ப இளமையாக இருந்தேன். எனக்கு திருமணம் ஆகவில்லை. எந்த பொறுப்புகளும் இல்லை. என்னுடைய வேலையை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நான் முற்றிலுமாக மாறிவிட்டேன். எனக்கு தேவையானதை நானே தேர்ந்தெடுத்து என்னை மாற்றி கொண்டுள்ளேன்” என்றார் 


தொடர்ந்து மணி ரத்னம் உடனான உறவு குறித்து பேசிய சுஹாசினி, “ நாங்கள் வெளியே தான் சாப்பிடுவோம். வீட்டிற்குள் சாப்பிடமாட்டோம். ஏசி இருக்காது. நிலவொளியை ரசித்து கொண்டு பெசன்ட் நகர் பீச்சில் ஒருவரை ஒருவர் ரசித்து கொண்டு தான் சாப்பிடுவோம். எங்களுடைய நாளை சந்தோஷமாக செலவழிப்போம். எல்லோரும் அப்படி இருக்கிறார்களா என்றால் தெரியவில்லை. எங்களுக்கு ஒருவரை ஒருவர் நாங்கள் பாரமாக இருந்ததில்லை” என்றார்.