ஆயுத பூஜை பண்டிகை வருவதால் தருமபுரி மாவட்டத்தில் பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ரசாயனம் கலந்த அரிசிகளை வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக வாங்கி தரமற்ற பொரி தயாரிப்பதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

வருடந்தோறும் ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தருமபுரி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட பொரி பட்டறைகளில் ஒரு மாதங்களுக்கு முன்பே பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொரி பட்டறைகளில், அரிசி பதப்படுத்துதல், காய வைத்தல் போன்ற பணிகளில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு, பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொரி சென்னை, கோவை, நீலகிரி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஆயுத பூஜைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பொரி உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாள் ஒன்றுக்கு 300 முதல் 500 மூட்ட பொரி உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் ஆயுத பூஜைக்கு முன்பதிவு செய்த வியாபாரிகள் 100 முதல் 200 மூட்டைகள் வரை வாங்கிச் செல்கின்றனர்.



 

ஆனால் கடந்த ஆண்டு போல, விற்பறைக்கான முன்பதிவு இல்லாமல், இந்த ஆண்டு பொரி விற்பனை மந்தமாகவே உள்ளது. மேலும் முன்பதிவுகள் கூட குறைவாகவே இருப்பதால் இந்த ஆண்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு 50 படி கொண்ட ஒரு மூட்டை பொரி 400 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் விலைவாசி உயர்வால், இந்த ஆண்டு ஒரு‌மூட்டை பொரி 450-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலத்திற்குப் பிறகு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனை செய்வது முற்றிலுமாக குறைந்துள்ளது. தற்பொழுது ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பொரி உற்பத்தி செய்யும் ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை என்பது குறைவாகவே இருந்து வருகிறது.



 

மேலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பொரி உற்பத்தி ஆலைகள், இயற்கை முறையில் பொரி உற்பத்தி செய்யாமல், நேரடியாக மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற இடங்களில் இருந்து ரசாயனம் கலந்த அரிசியை கொள்முதல் செய்கின்றனர். இந்த அரிசி பதப்படுத்தும் வேலையில்லாமல் வேதிப்பொருட்கள் கலந்து வருவதால், இதனை நேரடியாகவே பொரி உற்பத்தி செய்ய முடிகிறது. இந்த ரசாயனம் கலந்த பொரியை உண்ணும் பொழுது அதன் சுவை வேறு மாதிரியாகவும், உண்பவர்களுக்கு வாய்ப்புண் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. இதனால் பொரியின் மீது மக்களுக்கான மோகம் குறைந்து வருகிறது. இதனால் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் பொரி தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ரசாயனம் கலந்த அரிசியில் பொரி உற்பத்தி செய்பவர்கள் குறைந்த விலைக்கு 38 படி கொண்ட மூட்டையில், பொரி வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொரியின் தரம் அறியாத மக்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்ற, ரசாயனம் கலந்த பொரியை வாங்கி செல்கின்றனர். எனவே உணவுப் பொருட்களை, உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து சுத்தமான தரமான உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோலவே இந்த பொரி உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து ரசாயனம் கலந்த அரிசியில் பொரி தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நலிவடைந்து வரும் இந்த பொரி உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியத்தில் கடன் உதவி வழங்க வேண்டும் என பொரி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.