இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியில் ஆப்ரேசன் அஜய் என்ற பெயரில் அப்பகுதியில் இருந்த 212 இந்தியர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேரில் 21 பேர் சென்னை விமான நிலையத்திற்கும், 7 பேர் கோவை விமான நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி டெல்லியில் இருந்து விமானம் மூலம் விமல், ரஞ்சித், சந்தியா, வினோத், சந்தோஷ், திவாகர், ராஜலட்சுமி ஆகிய 7 பேர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். இவர்களில் 2 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் நாமக்கல், கரூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கோவை வந்த 7 பேரையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.




இதுகுறித்து இஸ்ரேலில் இருந்து மீட்டு வரப்பட்ட திவாகர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “4 ஆண்டுகளாக இஸ்ரேலில் வேலை பார்த்து வந்தேன். போர் துவங்கிய நிலையில் இந்திய அரசு சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வந்தது. இஸ்ரேலில் இருந்த எங்களிடம் தமிழ்நாடு அரசு 3, 4 நாட்களாக தொடர்பில் இருந்தனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்து எங்களுடன் பேசி வந்தார்கள். டெல்லியில் இருந்து வர விமானம் மற்றும் உணவு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்தது. வீட்டுக்கு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர். எங்களை மீட்ட அனைவருக்கும் நன்றி. இஸ்ரேலில் தெற்கு பகுதியில் பிரச்சனை உள்ளது. இஸ்ரேலில் தெற்கு பகுதியில் உள்ள 2 நகரங்களில் ராக்கெட் தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் வடக்கில் பிரச்சனை இல்லை. லெபனான், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தினால் அப்பகுதியில் பிரச்சனை ஏற்படும். ராக்கெட் தாக்குதல் நடந்த போது பாதுகாப்பிற்காக ஷெல்டரில் தங்கி இருந்தோம்” எனத் தெரிவித்தார்.


பாரதியார் பல்கலைக்கழக மாணவியான ராஜலட்சுமி கூறுகையில், “இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இன்னும் நிறைய பேர் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலில் வடக்கு பகுதியில் நான் இருந்தேன். அங்கு பயம் இல்லை. இஸ்ரேலில் சிவிலியனுகளுக்கு பிரச்சனை இல்லை. இஸ்ரேல் அரசு பாதுகாப்பு தந்தது. இஸ்ரேல் அரசு ஒரு ஆஃப் மூலம் அனைவருக்கும் தொடர்ந்து தகவல்களையும், உத்தரவுகளையும் தந்து வந்தது. ராக்கெட் தாக்குதல் நடந்தால் கமெண்ட் வரும் வரை பங்கரில் இருந்தோம். பங்கரில் பாதுகாப்பு இருந்தாலும் பழக்கம் இல்லாததால் பயம் இருந்தது இஸ்ரேலில் உணவு, தண்ணீர், மின்சாரம் பிரச்சனை இல்லை. ராக்கெட் தாக்குதல் நடந்தால் தண்ணீர், மின்சார பிரச்சனை வரலாம்” எனத் தெரிவித்தார்.




இதனைத்தொடர்ந்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், “இஸ்ரேலில் இருந்த கோவை, நாமக்கல், கரூர், நீலகிரி பகுதிகளை சேர்ந்த 7 பேர் கோவைக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து கோவைக்கு 7 பேர் விமானம் மூலம் வந்துள்ளனர். கோவையை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வந்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் பிரச்சனை முடிந்த பின்னர் இவர்கள் அங்கு செல்லலாம். இஸ்ரேலில் யாராவது இருந்தால் அரசு அறிவித்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.