சிறுத்தை சிவா இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில், நடிகர் சூர்யாவின் 42ஆவது படமாக இந்த ஆண்டு வெளியாகும் திரைப்படம் ‘கங்குவா’.


ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்க, பாலிவுட் நடிகை திஷா பதானி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிமல் படப்புகழ் நடிகர் பாபி தியோல், நடிகர் நட்டி நட்ராஜ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கும் நிலையில், சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், கற்பனை கலந்த சரித்திரக் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோடை விடுமுறையைக் குறிவைத்து மெகா பட்ஜெட் பான் இந்திய படமாக இந்த ஆண்டு ஏப்ரலுக்கு கங்குவா வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


அந்த வகையில் கங்குவா படத்துக்காக நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்களை படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது.


 






இந்த ஃபோட்டோக்களை சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் கடந்த ஜன.16ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதேபோல் பாபி தியோல் பிறந்த நாளை ஒட்டி அவரது போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது.


13 விதமான தோற்றங்களில் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கங்குவா உருவாகியுள்ளது.


‘நெருப்பு சக்தி கொண்டவர்’, ‘மிகவும் வீரம் கொண்டவர்’ எனும் பொருள் கொண்ட கங்குவா எனும் படத்தலைப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி கங்குவா திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகர் சூர்யா அடுத்தடுத்து சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு, இந்தியில் சூர்யா 44 ஆகிய திரைப்படப் பணிகளில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


மேலும் படிக்க: Saranya Ponvannan: இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும் ரொம்ப ஃபீல் பண்றேன் - சரண்யா பொன்வண்ணன் வருத்தம்!


Actress Trisha: ''திரிஷானு எங்க சொன்னேன்...'' திடீர் பல்டி அடித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ!