லால் சலாம், லவ்வர் படங்களுக்கு மத்தியில் இளம் நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியான மலையாள திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு, பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.


லால் சலாம், லவ்வர்




ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, கடந்த பிப்.09ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’ (Lal Salaam). கிரிக்கெட், மத அரசியல் என் சென்சிட்டிவான கதையை அடிப்படையாகக் கொண்டு ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் என பல நட்சத்திரங்கள் நடிக்க ரூ.90 கோடிகள் செலவில் லால் சலாம் திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியானது.


ரஜினியின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஐஸ்வர்யாவின் இயக்கம் என படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளினாலும், திரைக்கதை, மெதுவாக நகரும் காட்சிகள் என மற்றொருபுறம் நெகட்டிவ் விமர்ச்னங்களையும் பெற்றது.


இதேபோல் மணிகண்டன் நடிப்பில் லால் சலாம் படத்துக்குப் போட்டியாக வெளியான லவ்வர் திரைப்படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது. அனைத்து தலைமுறையினரும் பொருத்திப் பார்க்கக்கூடிய டாக்ஸிக் காதலை மையப்படுத்தி உருவான இப்படம், லால் சலாம் படத்தினைத் தாண்டியும் வரவேற்பைப் பெற்றது.


பாக்ஸ் ஆஃபிஸில் சறுக்கிய ரஜினி!


இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம், 11 நாள்களில் ரூ.16.36 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது.


Screen Grab From sacnilk.com


இதேபோல், லவ்வர் திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.4.38 கோடிகளை இந்தியாவில்  வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. 


மாஸ் காண்பிக்கும் ‘ப்ரேமலு’



இந்நிலையில் கடந்த பிப்.09ஆம் தேதி மலையாளத்தில் பிரபல நடிகர், ஃபஹத் ஃபாசில் தயாரிப்பில், இளம் நடிகர்கள் நேஸ்லன் கஃபூர், மேத்யூ தாமஸ், நடிகை மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில், ஜாலி ரோம் - காம் படமாக ‘ப்ரேமலு’ (Premalu) வெளியானது. முன்னதாக மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘சூப்பர் சரண்யா’, ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ ஆகிய 2 படங்களை இயக்கிய கிரீஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.


இளம் நடிகர், நடிகையர் பட்டாளத்துடன் ரூ.3 கோடி எனும் குறைவான பட்ஜெட்டில் தயாரான இப்படம், மலையாள சினிமா தாண்டி தமிழ், தெலுங்கு என பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்து தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் கலக்கி வருகிறது. திரையரங்கில் வெடித்து சிரிக்கும் ரசிகர்களுடன் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், இந்தியாவில் இதுவரை ரூ.24.55 கோடிகள் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தெரிவித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ. 44.25 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 






மலையாள சூப்பர்ஸ்டார்களும் சரண்டர்


மற்றொருபுறம் டொவினோ தாமஸ் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ திரைப்படம், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றபோதும், இந்தியா முழுவதும் இதுவரை ரூ.7.9 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.




இதேபோல் சென்ற மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படமும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் அடி வாங்கி ஒட்டுமொத்தமாக ரு.17.40 கோடிகளை மட்டுமே இதுவரை வசூலித்துள்ளது.


சூப்பர் ஸ்டார்களை ஓரம் கட்டிய இளைஞர் பட்டாளம்


மற்றொருபுறம், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மாறுபட்ட நடிப்பில் கடந்த பிப்.15ஆம் தேதி வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் கடந்த ஆறு நாள்களில் ரூ.15.80 கோடிகளை இந்தியா முழுவதும் வசூலித்துள்ளது.


கண்டெண்ட் ரீதியாக பொதுவாக கை ஓங்கும் மலையாள சினிமா உலகம், தற்போது வசூலிலும் தமிழ் சினிமாவை ஓவர்டேக் செய்து பயணித்து வருவது பேசுபொருளாகியுள்ளது.


மேலும், ரஜினிகாந்த், மோகன் லால், டோவினோ தாமஸ் என மாஸ் நடிகர்களுடன் போட்டி போட்டு இளம் நடிகர் பட்டாளத்துடன் களமிறங்கிய ‘ப்ரேமலு’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் கெத்து காண்பித்து வருவது இரு தரப்பு சினிமா வட்டாரத்தையும் வாயடைக்க வைத்துள்ளது.