கலகலப்பு 3-ஆம் பாகத்தில் நடிகர் கவின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


சுந்தர் சி


முறை மாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. கிரி. அன்பே சிவம் , அருணாச்சலம் என 30 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். எல்லா வகையான படங்களை இயக்கியிருந்தாலும் சுந்தரி சியின் காமெடி படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. முறை மாமன் படத்தில் கவுண்டமனியின் தொடங்கி தீயா வேல செய்யனும் குமாரு படத்தின் சந்தானம் வரை நகைச்சுவை நடிகர்களுடனான அவரது காம்பினேஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 3 மற்றும் காஃபி வித் காதல் ஆகிய இரு படங்களும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இதனால் தனது மிகப்பெரிய பலமான காமெடிக்கு மீண்டும் திரும்ப முடிவு செய்துள்ளாராம் அவர்.


கலகலப்பு 3


சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. விமல் , மிர்ச்சி சிவா, சந்தானம் , அஞ்சலி, ஓவியா,  இளவரசு, ஜான் விஜய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்திருந்தார்கள். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலகலப்பு இரண்டாம் பாகம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகமும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்து வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. தற்போது கலகலப்பு 3 ஆம் பாகத்தை சுந்தர் சி இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் கவினை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.


டாடா படத்தின் வெற்றிக்குப்பின் கவின் தற்போது ஸ்டார் படத்தில் நடித்து முடித்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்தப் படத்தை இயக்கி யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கவின் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.


இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கவினுக்கு ஜோடியாக இணைகிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவரும் கவின் கலகலப்பு 3 படத்தில் நடிப்பதற்கு கால் ஷீட் ஒதுக்குவது பெரும் கேள்வியாக இருக்கிறது. ஆனால் சுந்தர் சி உடன் இணையும் வாய்ப்பை அவர் நிச்சயமாக தவறவிட மாட்டார் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.


அரண்மனை 4


சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை  படத்தின் 4 ஆம் பாகம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.  முந்தைய பாகத்தில் நடித்த ராஷி கண்ணாவுடன் தமன்னா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இந்த பாகத்தில் இணைந்துள்ளனர். சுந்தர். சி முந்தைய பாகங்களைப்போல் இப்படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த  பொங்கல் வெளியீடாக வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் தேதி தயாரிப்பாளர் சார்பாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.