'கண்கள் குளமானது' - ஜெய்பீம் பார்த்த கமல் ஹாசன்... படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு!

நேற்று வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை அரசியல் தலைவர்களும் சினிமா துறையினரும் பாராட்டி வரும் நிலையில் இரண்டுமான கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார்.

Continues below advertisement

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம். ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உணர்வுகளை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தி, அனைவர் கண்களையும் குளமாக்கி உள்ளது ஜெய்பீம். தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை (jai bhim real story) தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவது என்ற ஒற்றை வரி கதை என்ற போதிலும் கூட சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையில் படம் பயணிப்பதால் ரசிகர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை என்பது படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். அனைத்தை விடவும் முக்கியமாக இந்த படத்தின் காட்சி அமைப்புகள் அனைத்து தரப்பு பாராட்டுகளையும் பெற்றுள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் எப்படி சாதிய வன்மத்தின் வலியை போகிறபோக்கில் காட்டி சென்றதோ அதே போல வலிந்து திணிக்காமல் அதேநேரம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அடக்குமுறைகளை அப்படியே காட்டுகிறது ஜெய்பீம் திரைப்படம். எனவேதான், ரசிகர்களை இருக்கையின் நுனியிலேயே அமர்த்தி வைத்து விடுகிறது.

Continues below advertisement

படம் பார்ப்போர் அனைவரையும் கண்கள் கலங்க வைக்கிறது, நெஞ்சம் கனக்க வைக்கிறது என்ற விமர்சனங்கள் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. இப்படி நேற்று இரவு வெளியாவதற்கு முன்பிலிருந்தே ப்ரிவ்யூ காட்சியில் பார்த்த பலரிடமிருந்தும் பாராட்டுகளை குவித்து வந்தது. முக்கியமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இரு பக்க அறிக்கை வெளியிட்டு சூரியாவிற்கும் இயக்குனருக்கும் குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். இரவு முழுவதும் மனதை கனக்க செய்தது என்று உருக்கமாக எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் படம் பேசும் அரசியலையும், சாதிய வன்முறையையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி சினிமா இயக்குனர்களும் நடிகர்களும் வெகுவாக பாராட்டி வந்தனர். தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை மனம் திறந்து பாராட்டியுள்ளார். 

 

இந்நிலையில், இப்படத்தை திரைப்பட கலைஞரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று பார்த்துள்ளார். அதையடுத்து படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது.  பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல் பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்." என்று எழுதியுள்ளார். அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் உள்ளவர்கள் இலவசமாக வீடுகளிலேயே காணலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola