இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புரோமோஷன் பணிகளை தொடங்கிவிட்டார். தற்போது கூலி படம் குறித்து அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் லோகேஷ் தனது சம்பளம் முதல் கூலி படத்தை பற்றி பல விஷயங்களையும் பேசியுள்ளார்.
ஆயிரம் கோடி வசூலிக்குமா?
தொகுப்பாளர் ஒருவர் கூலி திரைப்படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், "கூலி திரைப்படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா? இல்லையா? என என்னால் சொல்லமுடியாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக சொல்லமுடியும். ரசிகர்கள் டிக்கெட் வாங்கி படத்தை பார்க்கின்றனர். ரசிகர்கல் டிக்கெட் வாங்கும் பணத்திற்கு கண்டிப்பாக வொர்த்தான ஒரு படமாக கூலி இருக்கும். அவர்களை கண்டிப்பாக இப்படம் திருப்தி படுத்தும். அதைமட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
ரீ டேக் கேட்கும் அமீர்கான், கமல்
லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவரை பற்றி தவறாக சொன்னால் சட்டையை கழட்டி சண்டைக்கு செல்வது நான்தான் என்றும் மேடைகளிலேயே பேசியிருக்கிறார். இந்நிலையில், கமல்ஹாசனுக்கும், அமீர்கானுக்கும் இந்த விஷயத்தில் ஒரு ஒற்றுமை இருப்பதை தெரிவித்திருக்கிறார். ஒரு காட்சியை மேம்படுத்த நினைத்தால் அவர்கள் நடித்தது எப்படி என்பதை போட்டுக் காட்டி நமக்கு என்ன தேவை என்பதை சொன்னால் போதும். இது கமல் சார், ஆமீர் கான் சார் இருவரிடமும் பொதுவாக இருக்கும் விஷயம். இந்த ஷாட் சூப்பராக வந்திருக்கிறது என்று நான் சொன்னால் கூட கமல் சாரும், ஆமீர் கானும் ரீடேக் கேட்பார்கள் என தெரிவித்துள்ளார்.
அடுத்தது டிரைலர் தான்
கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிட்டு, மோனிகா பாடல்கள் வெளியாகி டிரெண்டிங்கில் இருக்கின்றன. ஹாலிவுட் நடிகை மோனிகா பெல்லூச்சியை வைத்து உருவாகியிருக்கும் மோனிகா பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தற்போது அளித்த பேட்டியில் கூலி படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பான் இந்தியா படமாக வெளியாகும் கூலி படத்தினை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.