தீபாவளி வந்தால் எந்த படத்திற்கு போகலாம்... எந்த ஷோ போகலாம்... எந்த நேரம் போகலாம்... இது தான் இன்றைய பலரின் தீபாவளி பிளான். இதை கடந்து பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அது குட்டீஸ்களின் கொண்டாட்டமாக தான் இருக்கும். இதுவே ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் போனால், நிலைமை வேறு விதமாக இருக்கும்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது, தீபாவளிக்கு முந்தைய நாளில் தொடங்கும். விடிய விடிய அனைவரும் கூடி மகிழ்ந்து கொண்டாடிய திருவிழாவாக தீபாவளி இருந்தது. முதல்நாளிலிருந்தே பட்டாசுகள் வெடிப்பது, மத்தாப்பு வைப்பது என அது வேறு விதமான கோலாகலம். முதல் நாள் காலையில் பற்ற வைக்கப்படும் அடுப்பு, அதிரசம், முருக்கு, சீடை என அடுத்தடுத்து பதார்த்தங்களுக்காக அணையாமல் எரியும். உண்மையை சொல்ல வேண்டுமானால், அந்த பணிகள் தீபாவளி அன்று காலையில் தான் முடியும். ஒருபுறம் சுட்டுக் கொண்டிருக்க மறுபுறம், சுடச்சுட சாப்பிட குழந்தைகள் கூட்டம் கூடிக் கொண்டிருக்கும். இன்று ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸோடு இனிப்பு கோட்டா முடிகிறது. இப்படி தான் ரசனையும் மாறிவிட்டது.
அன்று தீபாவளிக்கு முதல் நாள் விடிய விடிய பலரும் கண் விழித்து முழித்திருப்பார்கள். அதற்கான பணி இருக்கும். அவ்வாறு விழித்திருப்பவர்களுக்கு ஒரே டானிக்.... ‛தில்லான மோகனாம்பாள்’ திரைப்படம் மட்டுமே. அப்போது பொதியை தொலைக்காட்சி மட்டும் தான். டிடி5 என்று இருக்கும். நாளை தீபாவளி என்றால், முதல் நாள் இரவு 10 மணிக்கு கட்டாயம் தில்லானா மோகனாம்பாள் படம் ஒளிபரப்பாகும். 80களின் இறுதிகளிலும் 90களின் துவக்கத்திலும் இருந்தவர்களுக்கு அதுநன்றாக தெரியும்.
தில்லானா மோகனாம்பாள் அப்படி என்ன ஸ்பெஷல்...? அந்த படமே ஸ்பெஷல்தான். தூக்கத்தை கெடுக்கும் பலம் துக்கத்திற்கும், சந்தோசத்திற்கு மட்டுமே உண்டு. தீபாவளி போன்ற பண்டிகை நாளில் துக்கமான படத்தை போட முடியாது. சந்தோசமான படம் மட்டுமே ஆப்சன். அப்படி பார்க்கும் போது தூர்தர்ஷனின் ஒரே சாய்ஸ், ‛தில்லானா மோகனாம்பாள்’.
1968 ஜூலை 27 ல் வெளியான ஒரு திரைப்படம் 90கள் வரை பலரை மகிழ்வித்திருக்கிறது. இன்றும் மகிழ்விக்கிறது. என்றால், அந்த படமே சிறப்பானது தானே. படம் முழுக்க கலகலப்பான காட்சிகளும், கதாபாத்திரங்களும், இசை விருந்துமாய் வேறு ரகத்தில் இருக்கும். சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், திருவாரூர் மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்திருப்பார்கள். அவர்களின் குழுக்களாக ஏவிஎம் ராஜன், பாலய்யா, தங்கவேலு, இவர்கள் தவிர நாகேஷ், மனோரமா, நம்பியார் என பெரும் நட்சத்திர பட்டாளம் இருக்கும்.
அந்த படத்தை தழுவி தான் நாளடைவில் கரகாட்டக்காரன், சங்கமம் படங்கள் எல்லாம் வந்தது. இவற்றிக்கெல்லாம் முதல்வன் ‛தில்லானா மோகனாம்பாள்’ தான். கொத்தமங்கலம் சுப்பு கதையை, ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்த விதம், இனி அது போல் ஒரு வரம் வரவும் இல்லை, வரப்போவதும் இல்லை. பல குடும்பங்களை விடிய விடிய மகிழ்வித்து, பண்டிகையையும் மகிழ்ச்சியாக்கிய பெருமை தில்லானா மோகனாம்பாளுக்கு உண்டு. நகரமாக இருந்தாலும் கிராமமாக இருந்தாலும் ஒரே படம், ஒரே மகிழ்ச்சி ‛தில்லானா மோகனாம்பாள்’ மட்டுமே.
அருமையான செட்டிங்... அழகான மெக்கப், ஈஸ்ட்மென்ட் கலர் என எல்லாம் சேர்ந்து படத்தோடு நம்மை பயணிக்க வைக்கும். இன்று மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு சேனலில் தில்லானா மோகனாம்பாள் படம் திரைப்படுகிறது. வேண்டுமானால், 500 எம்.பி., செலவழித்தால் ஏதாவது ஒரு இணையத்தில் வேண்டிய நேரத்தில் அந்த படத்தை பார்க்க முடியும். ஆனால், அனைவரையும் மகிழ்வித்த தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்க்க வேண்டுமானால், அப்போது தீபாவளி வரை காத்திருக்க வேண்டும். 90 கிட்ஸ் அனுபவித்த அந்த சுகம், இனி எந்த தலைமுறையும் அனுபவிக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்வோடு கலந்திருந்த தில்லானா மோகனாம்பாள் படத்தை முடிந்தால், இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் இரவு உங்கள் வீட்டில் போட்டுப்பாருங்கள். உண்மையில் அந்த அனுபவம், மறுநாள் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் கூட தராது.