ப்ராஜக்ட் கே படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் - அமிதாப் பச்சன் நீண்ட நாள்களுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம்  ‘ப்ராஜக்ட் கே’ எனப்படும் ‘கல்கி 2898 ஏடி’.


பிரபாஸ் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் ராணா, பசுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் டீசர் வெளியீடு சாண்டியாகோவின் பிரபல ‘காமிக் கான்’ நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்று நடிகர்கள் கமல்ஹாசன், பிரபாஸ், ராணா, இயக்குநர் நாக் அஸ்வின் என படக்குழுவினர் அமெரிக்கா சென்று இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபல ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ், டியூன், அயர்ன் மேன் என பல படங்களை நினைவூட்டும்படி இருந்தாலும், இந்த டீசர் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று பெற்று வருகிறது.


இந்நிலையில், இந்த ‘காமிக் கான்’ நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாத நடிகர் அமிதாப், காணொளி வழியாகக் கலந்துகொண்டு உரையாடினார். மேலும் இந்நிகழ்வில் கமலுக்கும் அமிதாப்புக்கும் இடையிலான கலந்துரையாடல் சிறப்பம்சமாக அமைந்து அனைவரையும் ஈர்த்தது.  


நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “அமித்ஜியின் ஆற்றலுடன் வாழ்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். நாங்கள் கதைகளை உருவாக்குகிறோம், பார்வையாளர்களை நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள். அமிதாப் ஜி, பிரபாஸ்,  ராணா ஆகியோரின் நடிப்பைப் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும்” என அங்கிருந்தோரை உச்சிமுகர்ந்து பேசினார்.


அப்போது குறுக்கிட்டுப் பேசிய நடிகர் அமிதாப் பச்சன்,  அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல்... நீங்கள் எங்கள் அனைவரையும் விட அங்கு எப்பொழுதும் மிகவும் சிறப்பானவர்" என உச்சிமுகர்ந்தார். 


 






இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் இருவரான கமல்ஹாசன், அமிதாப் பச்சன் இடையிலான இந்த உரையாடல் அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.




மேலும் படிக்க: Oppenheimer Review: நொடிக்கு நொடி பதட்டம்... வரலாற்றை கண்முன் நிறுத்தும் காட்சிகள்... கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஒரு திரைக்காவியம்!


Barbie Movie Review in Tamil: லா... லா... பார்பிலேண்டில் பெண்களின் ஆட்சி... எப்படி இருக்கு ‘பார்பி’ திரைப்படம்..? முழு விமர்சனம்!