அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் ஒப்பன்ஹெய்மர் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஓப்பன்ஹெய்மர் படம், வரலாற்றின் ஒரு மிக முக்கியமான தருணத்தையும் அதை நிகழ்த்திய தனிநபர் ஒருவரின் உணர்வெழுச்சிகளையும் மிகச்சிறந்த திரை அனுபவமாக நமக்கு கொடுக்கிறது .


ஓப்பன்ஹெய்மர் கதை


அணு ஆயுதத்தின் தந்தை என்று உலகமே கொண்டாடிய  ஓப்பன்ஹெய்மர் ஒரு கம்யூனிஸ ஆதரவாளர் என்கிற அவர்மீதான குற்ற விசாரணையில் இருந்து தொடங்குகிறது படம். தன் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு தன் சார்பில் விளக்கம் தரும் ஒப்பன்ஹெய்மரின் பார்வையில் பின்னுக்குச் செல்கிறது கதை.


உலகத்தை ஆளும் போட்டி


இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். ஹிட்லரின் நாஜிப்படை உலகையே கைபற்றும் நோக்கத்தோடு வளர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து ஹிட்லரை எதிர்த்து வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டின் விஞ்ஞானிகளும்  ரகசிய ஆய்வுக்கூடங்களில் அணு ஆயுதத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது கேள்வி ஒன்றே ஒன்றுதான் யார் அதை முதலில் செய்து முடிக்க போகிறார்கள். இதனை முதலில் சாதிப்பவர்கள் உலகம் முழுவதையுமே  தனது கட்டுக்குள் வைக்கும் அதிகாரத்தைப் பெறுவார்கள். அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான ஓப்பன்ஹைமரிடம் இந்த  சவால் ஒப்படைக்கப்படுகிறது. ஜெர்மானியர்கள் அணு ஆயுதத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக அமெரிக்கா இந்த பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும். உலகையே கைக்குள் வைக்கும் ஒரு ஆயுதத்தை கண்டுபிடிக்கும்  ஒருவர்  தான் உருவாக்கிய ஆயுதம் ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரும் பின்விளைவுகளை எதிர்கொள்ளும்  தருணங்களை ஓப்பன்ஹெய்மரின் பார்வையில் சொல்கிறது படம்.


இயக்கம்


 ராபர்ட். ஜே ஓப்பன்ஹெய்மரின் சுயசரிதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்  ஆனால்  வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை  நம் கண்முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப்போல் துல்லியமாக தனது எழுத்து மற்றும் இயக்கத்தில் கொண்டு வந்திருக்கிறார் நோலன். வரலாற்றைத் தீர்மானிக்கப் போகும் செயலை செய்யும் மனிதர்கள் அந்த தருணத்தில் எந்த மாதிரியான உணர்வுகளுக்கு உள்ளாகியிருபபார்கள் என்பதை பார்வையாளர்களுக்கு முதன்மையாக கடத்த நினைத்திருக்கிறார் இயக்குநர். உலக நாடுகளுக்கு நடுவிலான போட்டி. அரசியல் சூழ்ச்சிகள், சரி எது தவறு எது என்று தீர்மானிக்க போராடும்  ஓப்பன்ஹெய்மரின் மனசாட்சி அவரது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த காட்சிகள் என தனது படத்திற்கு எல்லா அம்சங்களிலும் முழுமையை சேர்த்திருக்கிறார் நோலன்.


மூன்று மணி நேரங்கள் வெறும் வசனங்களால் மட்டுமே நகர்கிறது கதை. ஆனால் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசணமும் சுவாரஸ்யம் குறையாமல் நம்மை கவணிக்க வைக்கிறது. மேலும் படத்தை நோலன் ஐமேக்ஸில் எடுக்க விரும்பியதற்கான முக்கியமான காரணமும் அதுவே. ஓப்பன்ஹெய்மரின் இடத்தில் நம்மை  நிறுத்துவதற்காகவே ஒவ்வொரு காட்சியும் அந்த வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சின்ன அசைவும்,  ஒலியும் மிகத் துல்லியமாக  பதிவுசெய்யப்பட்டு நம்மை ஒரு காட்சியின் பதற்றத்தை உணரவைக்க முயன்றிருக்கிறார். வழக்கமாக நோலன் படங்களுக்கு இசையமைத்து வந்த ஹான்ஸ் ஜிம்மரின் குறை தெரியாத அளவிற்கு ஏன் அதைவிட தனித்துவமான ஒரு இசையை உருவாக்கியிருக்கிறார் லுட்விக் கோரான்ஸன்.


சிறந்த தருணங்கள்


ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிச் செல்லும் அம்சமான அணு குண்டு பரிசோதனை செய்யும் காட்சி  திரையில்  நிகழ்த்தப்பட்டிருக்கும் ஒரு சாதனை. இந்த காட்சியை நெருங்கும்போது பார்வையாளர்களாகிய நமது இமைகள் மூடாமல் பார்த்து ரசிக்கலாம்.


அதேமாதிரி படத்தின் இறுதிகாட்சியான ஒப்பன்ஹெய்மர் மற்றும் ஐன்ஸ்டைனுக்கு இடையில் நிகழும் உரையாடல் ஓப்பன்ஹெய்மர் எந்த மாதிரியான ஒரு மனச்சுமையை சுமந்து சென்றார் என்பதை நமக்கு உணர்த்தும்.


நடிப்பு எப்படி


இதுவரை நோலன் படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்த கிலியன் மர்ஃபி இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஓப்பன்ஹெய்மராக சுவாசித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரத்தின் மனதில் ஓடும் எண்ணங்கள் நடிப்பில் வெளிப்படுவதை காணலாம். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராபர் டெளனியை சூப்பர் ஹீரோ படங்களைத் தவிர்த்து நடிப்பிற்கு முக்கியத்துவன் அளிக்கப்படும் படங்களில் இன்னும் அதிகமாகவே ரசிக்க முடிகிறது. ஃப்ளோரன்ஸ் பியூ, எமிலி ப்ளண்ட் மற்றும் மேட் டேமன் தங்களது கதாபாத்திரங்களை திறம்பட செய்திருக்கிறார்கள்.


கடைசியாக...


கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியப் படங்களில் நிச்சயம் ஓப்பன்ஹெய்மர் ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை. அணு ஆயுதத்தின் கண்டுபிடிப்பு  ஒட்டுமொத்த மனித சமூதாயத்தின் இருப்பையே ஊசலாட்டத்தில் வைத்திருக்கும் அபாயத்தை ஓப்பன்ஹெய்மரின் குற்றவுணர்ச்சியால் உணர்த்துகிறார் நோலன்.