Barbie Movie Review in Tamil: இயக்குநர் கிரேட்டா கெர்விக், தனது ஆழமான பெண்ணியக் கருத்துகளை ப்ளாஸ்டிக் பொம்மைகளுள் புகுத்தி நம் நெஞ்சினுள் அழுத்தமாக பதிய வைத்திருக்கும் அற்புத முயற்சி தான் பார்பி! அவரது முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றது..? இதோ பார்பி திரைப்படத்தின் முழு விமர்சனம்!
கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இசா ரே, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பார்பி.
உலக அளவில் பிரபலமான பார்பி பொம்மைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் பார்பி. பல்வேறு அனிமேஷன் படங்களுக்குப் பிறகு இறுதியாக இப்படம் மனிதர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது. இப்படம் பார்பிகளின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது. பார்பிக்களின் உலகில், பார்பிக்களான பெண்கள் ஆட்சி செய்ய, உண்மையான உலகில், ஆண்கள் அடக்குமுறை செய்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் எடுத்துக் கூறுகிறது.
கதைக்கரு:
பார்பிகளின் உலகில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டிரியோடிபிகல் பார்பி (மார்கோட் ராபி) தவிர பலவிதமான பார்பிகளும் வாழ்ந்து வருகின்றன. இந்த பார்பிகள் பார்பி லேண்டை ஆட்சி செய்ய ‘கென்’ என பெயரிடப்பட்ட அங்கு உள்ள ஆண்கள் அனைவரும் பார்பிகளுக்கு துணைகளாக இருந்து வருகின்றனர்.
தினமும் உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்ததாக கடந்து கொண்டிருக்க, திடிரென ஒருநாள் காலையில் ஸ்டிரியோடிபிகல் பார்பி, ஏதோ வித்தியாசமான மனித உணர்ச்சிகளோடு கண் விழிக்க, அந்த பிரச்னைக்கு தீர்வு காண மனித உலகுக்கு பார்பியும் கென்னும் (ரியான் கோஸ்லிங்) வருகின்றனர்.
அங்கு பெண்களை ஒரு போகப்பொருளாக பார்க்கும் ஆண்களையும் வியாபாரமயமான சமுதாயத்தையும் கண்டு அதிர்ச்சி அடைகிறார் பார்பி. ஆனால் கென், உலகம் ஆண்களால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதை கண்டுகொள்கிறார்.
தொடர்ந்து மீண்டும் பார்பி லேண்டுக்கு தாய்-மகள் என இரண்டு மனிதர்களுடன் திரும்பும் பார்பீ, அங்கு கென்னால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர்கிறார். இதனைத் தொடர்ந்து பார்பி லேண்டில் நடப்பது என்ன? பார்பியும் கென்னும் அடுத்தடுத்து செய்யப்போவது என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படமே ‘பார்பி’
நடிப்பு எப்படி?
பார்பியாக நடித்திருக்கும் மார்கோட் ராபி, பார்பியாகவே வாழ்ந்திருகிறார் என்றே சொல்லலாம். நளினம், பேசும் விதம் என அனைத்திலும் பார்பியை அப்படியே பிரதிபலிக்கிறார். என்னதான் பார்பி சிறப்பாக நடித்திருந்தாலும், தன் நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்து மனதில் இடம் பிடிக்கிறார் ரியான் கோஸ்லிங். மொத்தத்தில் அனைத்து நடிகர்களும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு வேண்டியதை சிறப்பாக செய்து கடந்து செல்கின்றனர் என்றே கூறலாம்.
நிறை, குறைகள்:
பார்பியின் வசனங்கள் மற்றும் திரைக்கதை படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும் பார்பி லேண்டின் வசீகரமிக்க தோற்றம் பார்ப்பவர்கள் மனதை சுண்டி இழுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் கதைக்கு பொருந்தாதது போல் இருக்கும் க்ளைமேகஸ் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மிகவும் தேவையான பெண்ணியக் கருத்துகளை திணிக்க முயலாமல் பொம்மைகளை வைத்து நகைச்சுவைமுலாம் பூசி நம் கையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் க்ரேட்டா கெர்விக். மொத்தத்தில் க்ளைமேக்ஸை சற்று கதைக்கு பொருந்தும்படி மட்டும் வைத்திருந்தால் ‘பார்பி’ Plasticஆக இல்லாமல் Fantastic மாறியிருக்கும்!