விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில், சமூக பாதுகாப்புத்துறையின்கீழ், இயங்கிவரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தினை மாவட்டஆட்சியர் டாக்டர் சி.பழனி திடீர் ஆய்வு செய்தார்.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு தேவையான கல்வி, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், இவ்வில்லங்களில் அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொண்டு தேவையான அடிப்படை வசதிகள், குழந்தைகளின் கல்வி திறன் குறித்து அறிந்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.


அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேட்டில், சமூக பாதுகாப்புத்துறையின்கீழ், அரசின் குழந்தைகள் இல்லம் இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-இன் படி பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வில்லத்தில், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆதரவற்ற மற்றும் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் என 84 மாணவர்கள் மற்றும் வரவேற்பு பிரிவில் 07 பெண் குழந்தைகள் மற்றும் 07 ஆண் குழந்தைகள் என மொத்தம் 98 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் இவ்வில்லத்தில் 26 மாணவர்கள், வரவேற்பு பிரிவில் 2 பெண் குழந்தையும், 1 ஆண் குழந்தையும் என மொத்தம் 29 குழந்தைகள் உள்ளனர்.  தொடர்ந்து, இல்லத்தில், பதிவிற்கான சான்றுகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தங்கும் அறை வசதி, வகுப்பறைகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி, மின் விளக்கு, மின்விசிறி வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்தும், கண்காணிப்பு கேமரா தொடர் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான நூலகம் மற்றும் கணினி ஆய்வகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மேலும், குழந்தைகளின் வகுப்பறைக்கு நேரடியாக சென்று குழந்தைகளின் கற்றல் மற்றும் வாசிப்புத்திறன் குறித்து கேட்டறியப்பட்டது.  குழந்தைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் மாணவர்களுக்கு இசை பயிற்சிக்கான கருவிகளை பார்வையிடப்பட்டது. இல்லத்தில் குழந்தைகளின் உடல் நலனை பாதுகாத்திடும் வகையில், கல்வியோடு, உடல்திறனை மேம்படுத்தும் உடற்கல்வியினையும் பயிற்றுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லத்தினை நாள்தோறும் தூய்மையாக பராமரிப்பதோடு, குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து மாணவர்களை கண்காணித்திட வேண்டும்”  எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.