Kalaignar 100 Vijay: கலைஞர் 100 விழா கொண்டாட்டத்திற்கு தமிழ் திரையுலகம் தயாராகி வரும் நிலையில் கருணாநிதிக்கு சிலை வைக்க விஜய் விரும்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா:


 

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு கடந்த 2010ம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் தமிழ் திரை நட்சத்திரங்கள் கொண்டாடினர். அதில், விஜயகாந்த், ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என ஒட்டுமொத்த தமிழ் திரையுலக நட்சத்திரங்களும் பங்கேற்றனர். 

 

அதில் பங்கேற்றிருந்த நடிகர் விஜய், ” கலைஞர் எழுதிய பாடலை கேட்டு உள்ளேன். அதில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் எல்லோருக்கும் இடம் உள்ளது. ஏழைகளுக்கும், ஏழை தொழிலாளர்களுக்கும் சொந்தமாக நிலம் கொடுத்து வீட்டு கட்டி தருவது சாதாரணமாக செயல் இல்லை. அதை கலைஞர் செய்து வருகிறார். அந்த பகுதிக்கு கலைஞர் நகர் என்று பெயர் வைப்பதாக கேள்விப்பட்டேன். அது மட்டும் பத்தாது. அந்த இடத்தில் கலைஞர் அவர்களுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவருடைய 100வது வயதில் இதேபோல் ஒரு விழா நடத்தி, அவருடன் சேர்ந்து நானும் அந்த சிலையை ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என கூறியுள்ளார். 





 

அதேமேடையில் பேசிய நடிகர் அஜித், 60ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே என்று கலைஞரை புகழ்ந்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், சமூக நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க தமிழ் சினிமாவில் இருப்பவர்களை மிரட்டுவதாகவும், எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்றும், யாரும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் பேசினார். அஜித்தின் இந்த பேச்சு அப்போது சினிமாவிலும், அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தற்போது கலைஞர் 100 விழாவுக்காக தமிழ் திரையுலகம் தயாராகி வருகிறது. அதற்காக ஒவ்வொரு நடிகர்களையும் சந்தித்து விழாக்குழு அழைப்பிதழை வழங்கி வந்தனர். தற்போது நடைபெற உள்ள கலைஞர் 100 விழாவில், அஜித், விஜய் பங்கேற்கவில்லை. அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்கிலும், விஜய் கோட் ஷூட்டிங்கிலும் பிசியாக நடித்து வருகின்றனர். 

 

கடந்த சில நாட்களாக அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய திமுக எம்பி கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.