அனிமல் படத்தின் வெற்றி மிக ஆபத்தானது என்று கவிஞர், இயக்குநர், பாடலாசிரியல் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார்.
அனிமல்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான படம் அனிமல். ரன்பிர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், த்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் அனிமல் படம் இடம்பிடித்துள்ளது.
உலகளவில் 900 கோடிகளை வசூலித்த இந்தப் படம் ஒரு சில தரப்பினரிடையே கடுமையான விவாதங்களை கிளப்பியது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஆணாதிக்கத்தை வலியுறுத்துவதாகவும் பெண் வெறுப்பை பேசுவதாகவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. நடிகர்கள் , கிரிக்கெட் வீரர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்புகள் இந்தப் படத்தை திட்டி பதிவிட்டிருந்தார்கள்.
அனிமல் படத்தின் வெற்றி ஆபத்தானது
தற்போது அனிமல் படத்தை பாலிவுட் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஜாவித் அக்தர் விமர்சித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலத்தில் நடந்த அஜந்தா - எல்லோரா திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஜாவித் அக்தர் அனிமல் படம் குறித்து பேசினார்.
“ஒரு கதாநாயகனின் இமேஜ் என்பது, எது சரி எது தப்பு என்கிற புரிதலில் உருவாக்கப்பட வேண்டும். இன்றைய திரைக்கதை எழுத்தாளர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். காரணம் ஒந்த சமுதாயம் குழப்பத்தில் இருக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்று சமூதாயம் தீர்மானிக்கத் தவறிவிட்டது. அந்த குழப்பம் தான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது.
ஒரு காலத்தில் ஏழைகள் என்றால் நல்லவர்கள். பணக்காரர்கள் என்றால் கெட்டவர்கள் என்கிற பொதுப்புரிதல் இருந்தது. இன்று பணக்காரரை யாரும் நாம் விமர்சிப்பதில்லை. ஏனென்றால் நாம் அனைவரும் பணக்காரர்களாகவே விரும்புகிறோம். அதனால் அதை விமர்சிக்க முடியாது. ஒரு படத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தனது ஷூவை நாக்கால் நக்கும்படி சொல்வது, ஒரு பெண்ணை அறைவது ஆகியவற்றை நியாயப்படுத்துகிறான். அந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் ஆகிறது என்றால் அது மிகவும் அபத்தானது.
இன்றை சூழலில் இயக்குநர்களை விட பார்வையாளர்களுக்கு பொறுப்புகள் அதிகம். தங்களுக்கு எந்த படம் பிடிக்கும் எந்த படம் பிடிக்காது என்று அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எதை நிராகரிக்க வேண்டும் என்பது பார்வையாளர்களின் கையிலே உள்ளது. இறுதி முடிவு ரசிகர்களின் நீதிமன்றத்தில் தான் எடுக்கப்படவேண்டும். எத்தனையோ நல்ல படங்கள் வெளியாகி போதுமாக ரசிக கவனம் பெறாமல் இருக்கின்றன“என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Vadivelu Vijayakanth: “விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்லப்போகும் வடிவேலு” ஏபிபி நாடு-விற்கு கிடைத்த பிரத்யேக தகவல்