12th Fail Movie review in Tamil: இந்தியில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு தியேட்டரில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெளியான படம் ‘12 ஆம் வகுப்பு ஃபெயில் (12th Fail)'. தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிம் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமன் புஷ்கர், அனந்த் விஜய் ஜோஷி, கீதா அகர்வால், ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி, விகாஸ் திவ்யாகீர்த்தி என பலரும் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார். 


படத்தின் கதை


ஐபிஎஸ் அதிகாரியான மனோஜ் குமார் ஷர்மாவின்  வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலம் சம்பல் பள்ளதாக்கில் வசிக்கும் மனோஜ் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நேர்மையாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அங்கு எதுவுமே சரியாக இல்லை. அங்குள்ள பள்ளியில் காப்பி அடித்தாவது மாணவர்கள் பாஸ் பண்ண வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதற்கு ஆசிரியரே உதவி செய்யும் நிலையில் சரியாக மனோஜ் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நாளில் காவல்துறை அதிகாரியான துஷ்யந்த் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட தூண்டிய  தலைமை ஆசிரியரை கைது செய்கிறார். இதனால் அந்த ஆண்டு மனோஜ் ஃபெயில் ஆகிறார். இதனிடையே தன் சஸ்பெண்டை எதிர்த்து மனோஜின் தந்தை நீதிமன்றத்தை நாட வீட்டை விட்டு வெளியேறுகிறார். 


இதன்பின்னர் மனோஜ் மற்றும் அவரது சகோதரர் இருவரும் ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கிறார்கள். அதிலும் பிரச்சினை ஏற்பட மனோஜ், டிஎஸ்பி துஷ்யந்தை நாடுகிறார். அவர் உதவி செய்யும் நிலையில் மனோஜூக்கு துஷ்யந்தை மிகவும் பிடிக்கிறது. உங்களைப் போல ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என கேட்க, ‘காப்பி அடிப்பதை நிறுத்த வேண்டும்’ என கூறுகிறார். 


இந்த வார்த்தை மனோஜ் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த நேர்மையான அதிகாரியின் வார்த்தையால் காப்பி அடித்து பாஸ் பண்ண எண்ணிய மனோஜ் எப்படி ஐபிஎஸ் ஆனார்? எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற்றார்? என்பதே இப்படத்தின் கதையாகும். 


கசக்கும் உண்மை நிலவரங்கள் 


12th Fail படத்தின் அடிப்படை கதை இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தாலும் திரைக்கதையில் காட்டப்படும் காட்சிகள் அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது. வடமாநிலங்களில் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் செய்திகளாக நாம் கேள்விப்பட்டிருந்தாலும் ஆசிரியரே போர்டில் எழுதி போட்டு மாணவர்களை பாஸ் பண்ண வைப்பது தொடக்கமே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 


தொடர்ந்து டிஎஸ்பி ஆக வேண்டுமென குவாலியருக்கு செல்லும் மனோஜ் பேருந்தில் தன் உடமைகளை தொலைத்து விட்டு ஊர் திரும்ப முடியாமல் பசியோடு பல நாட்கள் போராடுகிறார். அங்கு யுபிஎஸ்சி தேர்வுக்காக படிக்க செல்லும் நாவல் நட்பு கிடைக்கிறது. அவர் டிஎஸ்பி பதவிக்கு மேல் இருக்கும் ஐபிஎஸ் பற்றி சொல்கிறார். அப்படி என்றால் என்ன என கேட்கும் அளவுக்கு இருக்கும் மனோஜ்க்கு கிடைத்த கல்வி தரம் வட இந்தியாவின் மேல் இருக்கும் கருப்பு புள்ளி.  


கல்வி தான் எல்லாம் என நினைக்கும் ஹீரோ, அதிகாரம் கிடைத்தால் மக்களுக்கு உதவலாம் என நினைக்கும் ஹீரோயின், அரசு அதிகாரியாக இருக்கும் அப்பா ஊழலில் திளைத்ததால் தானும் அதிகாரியாகி ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம் என நினைக்கும் நண்பர் நாவல், பலமுறை யுபிஎஸ்சி தேர்வு எழுதி தோற்று என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் நபர் என படம் முழுக்க  நாம் பார்க்கும் கேரக்டர்களை கொண்டுள்ளார்கள். 


மொழி ஒரு கருவி தான். அது எந்த எல்லைக்கும் தடை இல்லை என யுபிஎஸ்சி தேர்வு நேர்காணலில் மனோஜ் சொல்லும் இடம் சரியான பதிவு. அதேபோல் யுபிஎஸ்சி தேர்வில் இருக்கும் கடின நிலை, படிப்புக்காக எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கலாம் என நினைக்கும் மனோஜின் கேரக்டர் என படம் முழுக்க பாடம் எடுத்துள்ளார்கள். படிப்புக்கு இடையில் ஷ்ரத்தாவுடன் ஏற்படும் காதல், அது எப்படிப்பட்ட வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உந்துதலாக இருந்தது என காட்டப்படும் இடங்கள் ரசிக்க வைக்கிறது. அதேபோல் பேரனின் படிப்புக்காக காசு சேர்த்து வைக்கும் பாட்டியின் அன்பு நெகிழ வைக்கிறது. 


நடிப்பு எப்படி? 


ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவாக விக்ராந்த் மாஸ்ஸி பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார். இதேபோல் ஷ்ரத்தாவாக வரும் மேத்தா ஷங்கர், நாவல் ஆக வரும் சஞ்சய் பிஷ்னோய், டிஎஸ்பி துஷ்யந்த் ஆக பிரியான்ஷூ சட்டர்ஜி, பாட்டியாக வரும் சரிதா ஜோஷி என படம் முழுக்க மனம் நிறைவான நடிப்பு தான். 


இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வுடன் சில காட்சிகள் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் அதனை பெரிதாக காட்டவில்லை. மேலும் படத்தின் நீளம் மிக அதிகம். முக்கிய காட்சிகளை விறுவிறுப்பாக சொல்லியிருந்தால் இன்னும் அதிகமாக கொண்டாடப்பட்டிருக்கும். மெதுவாக நகரும் காட்சிகளோடு இருந்தாலும் உண்மையில் 12th Fail படம் அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய படமாக தான் இருந்தது. இந்த படம் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் பார்த்த ரசிகர்கள் 12th Fail படத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.