2009ஆம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர். “முதல் படம் அளவிற்கு இல்லை..எதிர்பார்த்த எதுவும் இல்லை” என படம் குறித்து நெகடிவான விமர்சனங்கள் வந்தாலும், படம் என்னவோ பல லட்சம் மக்களை கவர்ந்துள்ளது. 


4 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட அவதார்-2:


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய திரைப்பட திருவிழாவான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தி பேன்ஷீஸ் ஆஃப் இனிஷிரின், எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ், எல்விஸ், அவதார் தி வே ஆஃப் வாட்டர் உள்பட மொத்தம் 10 படங்கள் சிறந்த படங்களுக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவதார் இரண்டாம் பாகம் சிறந்த படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் மற்றும் சிறந்த இசை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படம், ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடையதுதானா? என்ற கேள்வி பல ரசிகர்களின் மனதில் எழுந்தது. 




கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற 82ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவதார் படத்தின் முதல் பாகம்,  மொத்தம் 9 பிரிவுகளில் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை வென்றது. இதே போல இந்த வருட ஆஸ்கர் விருதுகளையும் அவதார் 2 படம் வாங்கி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


Also Read:Avatar 2 Box office: அதகளப்படுத்தும் அவதார் 2..! தொடரும் வசூல் வேட்டை..! புதிய சாதனை என்ன தெரியுமா..?


அவதார் 2 சிறந்த படமா?


என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் அனைவருக்கும் பாண்டோரா உலகின் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. முதல் பாகத்தில் காடுகளில் வாழும் ஒமாட்டிகாயா நாவி இன மக்களை காண்பித்த கேமரூன், இந்த பாகத்தில் நீரில் வாழும் மெட்காயினா மக்கள் குறித்து காண்பித்தார். உண்மையான மனிதர்களே இப்படத்தில் நடித்திருந்தனர், ஆனால் அது ஒரு இடத்தில் கூட உண்மையான மனிதர்கள்தான் என்பது தெரியவில்லை. காரணம், பல கிராஃபிக் கலைஞர்களின் உழைப்பு அதில் இருந்தது. முதல் படத்தின் தொடர்ச்சியாக இருப்பினும், இதில் புதுவிதமாக கடல் வாழ் மிருகங்களை காண்பித்தும் புதுப்புது அம்சங்களை கதை முழுவதும் நிரப்பியும் ரசிகர்களை மகிழ்வித்துருந்தனர். நீண்ட க்ளைமேக்ஸ் காட்சியை தவிர படத்தில் பெரிதாக வேறு எந்த குறையையும் பார்க்க முடியவில்லை.




வரலாற்றை ‘ரிபீட்’ செய்த அவதார்2!


அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், தங்களுக்கு படம் கிராஃபிக்ஸ் விருந்தாக இருந்தது என தெரிவித்திருந்தனர். ஆஸ்கர் விருதிற்கு அவதார் படத்துடன் சேர்த்து, டாப் கன் மேவரிக், ப்ளாக் பாந்தர், தி பேட்மேன் உள்ளிட்ட படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த படங்களில், அவதார் படத்திற்கு சிறந்த காட்சியமைப்பிற்கான (Best Visual Effects) விருது கிடைத்துள்ளது. அவதார் படத்தின் முதல் பாகமும், 13 வருடங்களுக்கு முன்னர் இதே சிறந்த காட்சியமைப்பிற்கான விருதினை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க:Avatar 3: "அடுத்த பாகத்துல வில்லன், ஹீரோ எல்லாமே இவங்க தான்..." சஸ்பென்ஸ் உடைத்த ஜேம்ஸ் கேமரூன்..!