95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் The Elephant Whisperers மற்றும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் மற்றும் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் “ The Elephant Whisperers” படம் விருதை வென்றது. இதனையடுத்து இந்த வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். 


பிரதமர் வாழ்த்து 


இதனிடையே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். இந்தியா பெருமிதம் கொள்கிறது” என ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதேபோல், நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை The Elephant Whisperers படம் உணர்த்தியுள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கு வாழ்த்துக்கள்.இந்தியத் தயாரிப்பிற்காக முதன்முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததை விட சிறந்த செய்தி இல்லை. இந்த குறும்படம் உருவாக்கம் மற்றும் கதை நகரும் அமைப்பு அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானது” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதேபோல, ”ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற வரலாறு படைத்துள்ளது. இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஆஸ்கர் விழா 


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விழாவில், “ Everything Everywhere All at Once” படம் சிறந்த படம், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இயக்குநர், திரைக்கதை, எடிட்டிங் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றது. இதேபோல் All Quiet on the Western Front படம்  சிறந்த ஒளிப்பதிவு, சர்வதேச படம், தயாரிப்பு வடிவமைப்பு, பின்னணி இசை ஆகிய 4 பிரிவுகளில் வென்றது. அவதார்-2 படம் சிறந்த காட்சியமைப்புக்காகவும், பிளாக் பேந்தர் வுகாண்டா ஃபார் எவர் படம் சிறந்த ஆடை வடிவமைப்புக்காகவும், சிறந்த ஒப்பனை மற்றும்  சிறந்த நடிகர் பிரிவில் ”தி வேல்” படத்துக்காகவும் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.