வசூலில் புதிய சாதனை:


உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவாகென்ஸ் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி, அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் தற்போது 2.075 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக ஈட்டியுள்ளது.  


அதாவது இந்திய மதிப்பில் ரூ.16, 914 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான  ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவாகென்ஸ் திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.16,824 கோடி ரூபாயை வசூலித்து, உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முறியடித்துள்ளது.


ஜேம்ஸ் கேமரூனின் ராஜாங்கம்:


தற்போது உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில், முதல் 4 இடங்களில் 3 இடங்களை ஜேம்ஸ் கேமரூனின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. அதன்படி, 2.92 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அவதார் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.  வெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் 2.79 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்தையும், 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் டைடானிக் திரைப்படம் மூன்றாவது இடத்தையும், 2.075 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அவதார் 2 திரைப்படம் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.


இதில் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை தவிர, மேலே குறிப்பிட்ட மற்ற 3 படங்களும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவானவை ஆகும். முன்னதாக, அவதார் 2 திரைப்படம் லாபகரமானதாக மாற, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 3 அல்லது நான்காவது இடத்தை பிடிக்க வேண்டும் என ஜேம்ஸ் கேமரூன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த 2 பாகங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.


அவெஞ்சர்ஸ் வசூல் முறியடிப்பு:


முன்னதாக 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம், அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் வாழ்நாள் வசூலை முறியடித்து இந்திய அளவில் அதிகம் வசூலித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் என்ற அந்தஸ்தையும் அண்மையில் பெற்றது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இந்தியாவில் ரூ. 367 கோடி வசூலித்திருந்த நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம், கடந்த 21ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் ரூ. 368.20 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. 


அவதார் 2:


கடந்த 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகெங்கும் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் 'அவதார்'. அப்படத்தின் 2 மணி நேரம் 40 நிமிடத்தையும் பார்வையாளர்களின் கவனத்தை  கொஞ்சம் கூட சிதறவிடாமல் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்து சென்றது என்றே சொல்ல வேண்டும். சுமார் ரூ. 1000 கோடி செலவில் எடுக்கப்பட்ட அப்படம் ரூ. 280 கோடி அமெரிக்க டாலரை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. உலகளவில் 52 ஆயிரம் திரையரங்குகளில் 160 மொழிகளில் திரையிடப்பட்டது. தற்போது வரை இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.