நெல்சன் இயக்கி ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. எல்லா ரசிகர்களும் முதல் நாளில் படங்களை பார்க்க விரும்பமாட்டார்கள். படம் வெளியான உடனே சுடச்சுட கூட்டத்தில் அடித்து பிடித்து கொண்டாடி பார்க்கும் ரசிகர்கள் ஒரு வகை என்றால், நிதானமாக திரையரங்குகளில் கூட்டம் குறைந்த பின் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மற்றொரு வகை. அந்த ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த வாரம் வெளியாக இருக்கும் நான்கு படங்களை ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
போர் தொழில்
போர் தொழில் படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் வெளிவந்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று போர் தொழில் என சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்ட திரைப்படம் இது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்பும் இப்படம் வசூலிலும் மக்களின் வரவேற்பிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது.
முதல் நாளில் சுமார் 85 லட்சம் வரை வசூல் செய்த இந்தத் திரைப்படம் தற்போது வரை கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. படம், சுமார் 6 கோடி செலவிலேயே தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அசோக் செல்வன் - சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்டம் தியேட்டரிலேயே 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக 75 நாள்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இப்படத்தை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் எப்போது என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.
மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’ . இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. படம் வெளியாகி ஒரு மாத காலம் நிறைவடையும் நிலையில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது இந்த சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் ப்ளாக்பஸ்டர். பிரச்னையில் இருந்து மக்களைக் காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.
சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்கள் வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகிறார்கள். ஊழலின் ஊற்றாக, அடுத்த நொடி உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் அந்தக் குடியிருப்பில் தினம் தினம் பிரச்னைகள்.
இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் போகாமல் எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத காமிக்ஸ் வரைபடக் கலைஞரான சிவகார்த்திகேயன், ஒரு பிரச்னையில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது தனக்கு கிடைத்த சூப்பர் பவரை கொண்டு அந்தத் துறை அமைச்சராக வரும் மிஷ்கினுடன் தைரியமாக மோதுகிறார். வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது மாவீரன் திரைப்படம்.
ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone)
நல்ல ஆக்ஷன் திரைப்படம் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதாகத் தோன்றினால் உங்களது காத்திருப்பு நிறைவடைந்தது. கால் கடோட், ஆலியா பட் இணைந்து நடித்திருக்கு ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone). முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்கள் வழிநடத்திச் செல்லும் ஆக்ஷன் திரைப்படமாக நிச்சயம் இருக்கும். வருகின்ற ஆக்ஸ்ட் 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸின் வெளியாகிறது இந்தப் படம்.