மக்களவையில் எந்த கட்சியையும் சாராமலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை வீழ்த்தும் அளவிலான, பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உள்ளது.


நம்பிக்கையில்லா தீர்மானம்:


50 எம்.பிக்களின் ஆதரவை கொண்டு மக்களவையை சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். அந்த தீர்மானம் மக்களவை சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரிவான விவாதத்திற்குப் பிறகு உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் தீர்மானம் வெல்வதும், வீழ்வதும் சாத்தியமாகும்.


பாஜக பலம்:


நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அவையின் அனைத்து உறுப்பினர்களும் அதாவது 543 பேரும் பங்கேற்றால், அதில் 272 பேரின் வாக்குகள் யாருக்கு சாதகமாக விழுகிறதோ அதன் அடிப்படையிலேயே, ஆட்சி கவிழ்வதும், தொடர்வதும் இறுதியாகும். அந்த வகையில் தற்போதைய சூழலில் பாஜக எந்த ஒரு கட்சியின் ஆதரவையும் நாடாமலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை வீழ்த்தும் அளவிற்கு மக்களவையில் வலுவான கட்சியாக உள்ளது.


தேசிய ஜனநாயக கூட்டணி:


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மொத்தம் 333 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அதில் பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் 301 பேர் ஆவர். அதுமட்டுமின்றி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் 13 எம்.பிக்களும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியில் 5 எம்.பிக்களும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளனர். இதேபோன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைகள் என 4 பேர் என மொத்தம் 333 மக்களவை உறுப்பினர்கள் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். இதனால், பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை காட்டிலும், கூடுதலாக 61 எம்.பிக்களின் ஆதரவு ஆளும் பாஜக அரசுக்கு உள்ளது.


கூட்டணியில்லாத எம்.பிக்கள்:


இதனிடையே, பாஜக மற்றும் காங்கிரஸ் என எந்த கூட்டணியையும் சேராமல் சில கட்சிகள் நடுநிலை வகிக்கின்றன. அதன்படி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் 22 எம்.பிக்கள், பிஜி ஜனதா தளத்தின் 12 எம்.பிக்கள், பகுஜன் சமாஜ் வாதியின் 9 எம்.பிக்கள், பாரத் ராஷ்ட்ரா சமிதியின் 9 எம்.பிக்கள் மற்றும் தெலுகு தேசம் கட்சியின் 3 எம்.பிக்கள் உள்ளிட்ட, 64 உறுப்பினர்கள் எந்த கூட்டணியிலும் சேராமல் உள்ளனர். ஆனால், இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் பல மசோதாக்கள் மிதான வாக்கெடுப்பின் போது, பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்பது குறிப்பிடத்தக்கது.


எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A)கூட்டணி:


2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் 142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளன. அதன்படி, காங்கிரஸ் 50 எம்.பிக்களையும், திமுக 24 எம்.பிக்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 23 எம்.பிக்களையும் கொண்டுள்ளன. இதேபோன்று ஜனதா தளம் 16 எம்.பிக்களையும், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா 6 எம்.பிக்களையும், தேசியவாத காங்கிரஸ் 4 எம்.பிக்களையும் கொண்டுள்ளது. மேலும், விசிக, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களின் ஆதரவுடன் இந்த கூட்டணி 142 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதனிடையே, மக்களவையில் 4 உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது.


மணிப்பூர் விவகாரம்:


மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்ற நோக்கில், தோல்வியுறும் என்று தெரிந்தும் காங்கிரஸ் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன் மீது கடந்த இரண்டு நாட்களாக காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இன்று பதிலளிக்க உள்ளார். அதைதொடர்ந்து நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பாஜக எளிதில் வெற்றி பெறும் என்பதை நிதர்சனமாக உள்ளது.