யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள ‘இறுகப்பற்று’ (Irugapatru) படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் இரண்டாம் நாளில் இருந்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி திரைக்கு வந்திருக்கும் ‘இறுகப்பற்று’ படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்ணதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள நிலையில் பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
திருமண வாழ்வில் தம்பதிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், ஆகியவற்றைக் கையாளுதல் ஆகியவை குறித்து இறுகப்பற்று திரைப்படம் பேசுகிறது. இன்றைய இளைஞர்கள் குடும்ப வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றை எளிதாக களையும் விதம் பற்றியும் தெளிவாக அலசி இருந்த இறுகப்பற்று படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது நாளில் இருந்து அனைத்து திரையரங்குகளிலும் 'இறுகப்பற்று' படத்துக்கான காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறுகப்பற்று படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்பிரபு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 'இறுகப்பற்று' திரைப்படம் வார இறுதி நாட்களில் மிகச்சிறப்பாக முன்னேறி வருகிறது. முதல் நாளில் இருந்து இரண்டாவது நாளிலேயே 225% வளர்ச்சியை பெற்றுள்ளது. பார்வையாளர்கள் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு ஆதரவு தர தவறியது இல்லை. ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி தயாராகிறது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே இறுகப்பற்று படக்குழுவை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சூர்யா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ இறுகப்பற்று படம் நிறைய அன்பை பெறுவதில் மகிழ்ச்சி. இயக்குநர் யுவராஜ் தயாளன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து” என்று கூறியுள்ளார்.
வெவ்வேறு குடும்பப் பின்னணி, வளர்ப்பு முறை, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றைச் சேர்ந்த மூன்று தம்பதியினர் தங்களின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளையும், அதற்கு தீர்வு காண அவர்கள் முயற்சிப்பதையும் ‘இறுகப்பற்று’ படத்தில் திரையில் காட்டி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.