இசை என்றால் இளையராஜா, இளையராஜா என்றால் இசை. தமிழ்நாட்டில் இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்க முடியுமா என்ன? பலரின் சோகங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், பயணங்கள், வலிகள், இழப்புகள் என அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க, இளையராஜாவின் மேஜிக்கல் இசையால் மட்டுமே சாத்தியம். எப்படிப்பட்ட சிச்சுவேஷன் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமாக இசை அமைக்கக் கூடிய இசை மேதை. சமீபத்தில் இளையராஜா கலந்துகொண்ட நேர்க்காணல் ஒன்றில் அவர் இதுவரையில் எந்த இயக்குநர் கொடுத்த சிச்சுவேஷனுக்கு இசையமைப்பது மிகவும் பிரமிப்பாகவும் சவாலாகவும் இருந்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார். 


 



“கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'சிந்து பைரவி' படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன்... என்ற பாடலுக்கு இசையமைப்பது சவாலாக இருந்தது எனலாம். இசைக் கச்சேரியில் மிகப்பெரிய பாடகர் ஒருவர் “பாடும்போது எல்லோருக்கும் புரியும்படி தமிழில் பாடுங்கள்” என சொல்லவும், “நீ என்னை விட பெரிய பாடகியா? வந்து ஒரு பாட்டு பாடு” என கர்வமாக சொல்கிறார் அந்த இசை மேதை.


அந்தப் பொண்ணும் ஏதோ ஒரு ஃபோக் பாடல் பாடுவாள் என்று தான் இயக்குநர் சொன்னார். ஆனால் அந்த பாடலுக்காக நான் பயங்கரமாக ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணேன். அப்படி வீட்டுக்குப் போய் ஹோம் ஒர்க் பண்ணி கம்போஸ் பண்ண ஒரே பாடல் என்றால் அது அந்தப் பாடல் தான். 


 


 






 


அந்தப் பாடலை கே.பாலச்சந்தர் சார் கேட்ட பிறகு என்னை மிகவும் பாராட்டினார். “இந்தப் பாட்டு தியேட்டர்ல வந்த உடனே கிளாப்ஸ் வரவில்லை, என்றால் நான் இத்துடன் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்” என நான் அவரிடம் சொன்னேன். அவர் அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தியேட்டர்ல போய் பார்த்துவிட்டு வந்து “நீங்க சொன்ன மாதிரியே நடந்தது” என சொன்னார். இந்தப் பாடலுக்கு சிறந்த இசைக்காக இளையராஜா மற்றும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை கே.எஸ். சித்ராவும் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.