சேலத்தில் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, மாமன் திரைப்படம் உங்களது குடும்பத்தை ஞாபகப்படுத்தும் என்று சொல்லி இருந்தும். அதனை தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கின்றனர். ஒரு திரைப்படத்தை பார்க்கும் போது நன்றாக உள்ளது என கூறுவதை விட, அவர்களோடு நினைத்துப் பார்ப்பது தான் இந்தப் படத்தின் வெற்றி. இந்தப் படத்தைப் போலவே அனைவரின் குடும்பத்திலும் இனி நல்லது நடக்கும் என நினைக்கிறேன் என்றார்.
காமெடி நடிகரிலிருந்து தற்போது நடிகராக மக்கள் வரவேற்கின்றனர். தன்னை வைத்து அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் அளவிற்கு மக்கள் வைத்துள்ளனர். இனிமேல் இதுதான் சரியாக இருக்கும். காமெடி நடிகர்களுக்கு பஞ்சமில்லை. ஒரு சில நேரங்களில் வெற்றிடம் உருவாகும் ஆனால் அதை நிரப்புவதற்கு உடனடியாக ஒருவர் வந்துவிடுவார் என்று கூறினார்.
ஒவ்வொரு ஜானர்களிலும் படங்கள் வந்து கொண்டு தான் உள்ளது. மக்கள் அனைத்தையும் வரவேற்று வருகின்றனர். குடும்ப படங்களுக்கு நமது தமிழ் மக்களும் தாய்மார்களும் அதிக வரவேற்பு கொடுக்கின்றனர். அதற்கு உதாரணமாக டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் உள்ளிட்ட படங்களை தற்போது மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும் விடாமுயற்சியாக நாம் என்னவாக விரும்புகின்றோமோ, வெற்றி பெறுவதற்கான மரியாதையாக நினைக்கின்றேன். என்னை நடிகனாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு நன்றி. நிச்சயமாக அவர்களுக்கு நல்ல படத்தை கொடுப்பேன் என்று நம்புகிறேன் என்றார்.
திரைப்படம் ஆன்லைனில் வெளியாவது குறித்த கேள்விக்கு, எவ்வளவு கட்டுப்பாடுகள் வைத்தாலும் அதை தாண்டி திரைப்படங்கள் ஆன்லைனில் வருகிறது. அதை எப்படி அவர்கள் எடுத்து வெளியிடுகிறார்கள் என தெரியவில்லை. இதற்கு ஒரே தீர்வு மக்கள் ஆன்லைனில் படம் பார்க்க கூடாது என்று கோரிக்கை வைத்தார். தமிழக அரசும், நடிகர் சங்கங்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். 100% அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என நம்புவதாக கூறினார்.
தன்னிடம் இன்னும் ஆறு, ஏழு கதைகள் உள்ளது. என்னிடம் யாராவது கதை கேட்டால் நிச்சயமாக அதை கொடுப்பேன். திரைப்படத்தை இயக்குவது குறித்து எனக்கு தெரியாது. கதை மட்டும் தற்போது எழுதி வருகிறேன் என்றார்.
அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, இது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது சென்று கொண்டிருக்கும் பாதை சரியாக போகிறது. அதை நோக்கி மட்டுமே செல்வதாக கூறினார்.
நான் நல்லா இருப்பதற்கு குடும்பத்தில் ஆசிர்வாதம் மிகவும் அவசியமான ஒன்று. அதைத் தாண்டி சினிமாவிற்கு வந்தேன் சினிமா என்னை தற்போது நல்ல நிலையில் வைத்துள்ளது. மக்கள் வரவேற்பு இல்லாமல் எந்த ஒரு துறையும், நபரும் தனித்துவமாக வருவது கடினம். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார். எனக்கு நான் நடித்த அனைத்து படங்களும் பிடிக்கும். தோல்வி படங்களும், வெற்றி படங்களும் பலவற்றை கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் வெண்ணிலா கபடி குழு எனது வாழ்க்கையில் தொடக்கமாக பார்க்கிறேன். அதன் பின்னர் விடுதலை திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். எனது வாழ்க்கையை விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின் என்று தான் கூற வேண்டும் என்று கூறினார்.
விரைவில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட உள்ளனர். அதில் எனது நண்பர் விஷாலின் திருமணமும் நடைபெற உள்ளது. அந்த நிகழ்விற்காக மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.