ஏஸ்

ஆறுமுக குமார் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ள படம் ஏஸ்.  விஜய் சேதுபதி , ருக்மினி வசந்த் , யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்வீராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், டெனெஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுபயா, கார்த்திக் ஜே, நகுலன், ஜஹ்ரினாரிஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மே 23 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது

டல் அடிக்கும் டிக்கெட் புக்கிங்

ஏஸ் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. சிவகார்த்திகேயன் இந்த டிரைலரை வெளியிட்டார். வரும் 23 ஆம் தேதி மே இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. சூதாட்டத்தை மைய கதையாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ஏஸ். எக்கச்சக்கமான ஆக்‌ஷன் , காமெடி , த்ரில்லை இந்த படத்தில் எதிர்பார்க்கலாம். இப்படத்தின் மூலம் கன்னட நடிகை ருக்மினி வசந்த் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார். யோகிபாபு கேமியோவா இல்லாமல் படம் முழுவதும் வருவது காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். இத்துடன் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ஏன்  போல்ட் கண்ணன் என்பது ஒரு ட்விஸ்டாக இருக்கிறது. 

இப்படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார் முன்னதாக விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. தற்போது ஏஸ் படத்திற்கும் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பில்லாமல் காணப்படுகிறது. படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியபோது டிக்கெட் புக்கிங் சொல்லிக் கொள்ளும்படி நடைபெறவில்லை. 

பாசிட்டிவ் விமர்சனம் காப்பாற்றுமா ?

முதல் நாளில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகினால் படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். விஜய் சேதுபதி நடித்து கடந்த ஆண்டு வெளியான விடுதலை 2 திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியது. தற்போது ஏஸ் திரைப்படமும் விஜய் சேதுபதிக்கு கமர்சியலான வெற்றியைக் கொடுக்குமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.