சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து ஓடிடி பிளாக்பஸ்டரான 'அன்பறிவு' படத்துக்குப் பிறகு, சத்யஜோதி ஃபிலிம்ஸ் மீண்டும் அவருடன் ‘வீரன்’ என்ற புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்த தினத்தில் வெளியிடப்பட்ட வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் படத்துக்கு சரியாக தயார்படுத்த வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். அந்த வகையில், முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'மரகத நாணயம்' மூலம் புகழ் பெற்ற ஏ.ஆர்.கே.சரவன் எழுதி இயக்கியிருக்கும் 'வீரன்' படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு புதியதாகவும் ரசிக்கும் வகையிலும் இருக்கும்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் கடந்த காலங்களில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைக் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இந்தப் புதிய படத்திற்கான எதிர்பார்ப்புகள் பெரிதாக உள்ளது.
படக்குழுவினர் ஏற்கனவே படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், 'வீரன்' படத்தை 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்றும், விரைவில் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக அனிருத் பாடிய தண்டர்காரன் எனும் பாடல் வெளியாகி யூட்யூபில் வரவேற்பைப் பெற்று படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியது.
நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட் ஆகியவற்றின் நேர்த்தியான கலவையுடன், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை கவரும் வகையிலான முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'வீரன்' திரைப்படம் இருக்கும் என படக்குழு முன்னதாகத் தெரிவித்துள்ளது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தை வழங்குகிறார். ஹிப்-ஹாப் ஆதியுடன் அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் டி மேனன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், எடிட்டிங் பணிகளை ஜி.கே பிரசன்னா மேற்கொள்கிறார்.
மேலும் படிக்க: Mrunal Thakur: இது எங்க சீதாமகாலஷ்மி இல்லை.. பிகினி ஃபோட்டோ பகிர்ந்த மிருணாள் தாக்கூர்... கமெண்ட்ஸில் களமாடும் டோலிவுட் ரசிகர்கள்!