'சீதாராமம்’ திரைப்படத்தின் மூலம் சென்ற தென்னிந்திய சினிமாக்களில் பெரும் புகழ் பெற்றவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
இந்தியில் தொலைக்காட்சி சீரியல்களின் மூலம் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கிய நடிகை மிருணாள், எந்தவித பின்புலமும் இன்றி பாலிவுட்டில் நுழைந்து தன் கடின உழைப்பால் வளர்ந்த நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்பட்டு வருகிறார்.
2012இல் ‘முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்’ எனும் தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமான மிருணாள், ‘கும் கும் பாக்யா’ (தமிழில் ‘இனிய இரு மலர்கள்’) மற்றும் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ (இந்தியில் ‘படே அச்சே லக்தே ஹே’) தொடர்கள் மூலம் இந்தி தாண்டி தென்னிந்தியாவிலும் பிரபலமானார்.
அத்துடன் மராத்தி மொழியில் ஹீரோயினாக 2014ஆம் ஆண்டு அறிமுகமான மிருணாள், பாலிவுட்டில் லவ் சோனியா, சூப்பர் 30, டூஃபான் படங்களின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து சென்ற ஆண்டு இவர் தெலுங்கில் நடித்த சீதா ராமம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. சீதா ராமம் படம் தெலுங்கில் நேரடியாகவும், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில், இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் ஒரு புறம் ஹிட் அடிக்க சீதா கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள், அந்தக் கதாபாத்திரமாகவே கருதப்பட்டு கொண்டாடித் தீர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் பாந்தமாக நடித்த மிருணாள், முன்னதாக பிகினி உடைகளில் பகிர்ந்த பழைய புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்து ”சீதாவாக வாழ்ந்த மிருணாள் இதுபோன்ற உடைகளை தவிர்க்க வேண்டும்” என டோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று நடிகை மிருணாள் மீண்டும் தன் பிகினி உடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், மிருணாளின் தெலுங்கு ரசிகர்கள் மீண்டும் அவரது கமெண்ட் செக்ஷனில் களமாடத் தொடங்கியுள்ளனர்.
‘இது எங்கள் சீதா இல்லை’ என்றும், “ராம் சொர்க்கத்திலிருந்து உங்களை பார்த்து வருந்திக் கொடுப்பார்” என்றும், “நான் பிகினியில் பார்க்க விரும்பாத ஒரே நடிகை நீங்கள் தான் மிருணாள்.. ஆனால் நீங்கள் அதை தகர்த்துவிட்டீர்கள்” என்றும் கமெண்ட் செக்ஷனில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மிருணாளின் கமெண்ட் செக்ஷனில் டோலிவுட் ரசிகர்கள் இப்படி வருத்தம் தெரிவித்து களமாடி வருவது கிச்சு கிச்சு மூட்டி இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி வருகிறது.