உலகம் முழுவதும் மொழிகளை கடந்து மக்களை சென்றடைந்துள்ள முக்கியமான விஷயங்களில் திரைப்படம் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. கதையையே நாயகனாக்கிய கதாபாத்திரங்கள் மூலம் வெற்றி பெற்ற எத்தனையோ திரைப்படங்கள் இருந்தாலும் பெரும்பாலான படங்களில் ஹீரோ – வில்லன்களே படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக கட்டமைக்கப்படுகின்றனர். வர்த்தக ரீதியான திரைப்படங்களுக்கு அது மிக முக்கியமும் கூட. தமிழ் திரைப்படங்கள் ஒன்றும் அதற்கு விதிவிலக்கு அல்ல.


நெகட்டிவ் கதாபாத்திரங்கள்:


ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்கள் உருவாக அவர்களது படங்களில் அமைக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரங்கள் மிக அவசியமாக இருந்தது. நம்பியார், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் வில்லத்தனத்தில் மிரட்டியதே அதற்கு உதாரணம்.


சமீபகாலமாக, தமிழ் திரைப்படங்களில் ரசிகர்கள் கதாநாயகர்களை விட வில்லன்களை மிகவும் விரும்புகின்றனர். அதற்கு பல படங்களை நாம் உதாரணமாக காணலாம். முன்பெல்லாம் படத்தில் நாயகனாக நடிப்பதே பெரிய விஷயமாக கருதப்பட்ட நிலையில், தற்போது நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களையே ரசிகர்கள் விரும்புகின்றனர். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் இடம்பெற்ற பஹத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் அதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.


வில்லன்களை கொண்டாடும் ரசிகர்கள்:


கதாநாயகர்களை விட மக்கள் வில்லன்களையும், நெகட்டிவ் கதாபாத்திரங்களையும் கொண்டாட ஆரம்பித்துள்ளதால் பல முன்னணி நடிகர்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர். 16 வயதினிலே படத்தில் பரட்டை என்கிற பவர்புல்லான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாராக உருவெடுக்கும் முன்பு ரஜனிகாந்த் மிரட்டியிருப்பார்.


அதன்பின்பு, தமிழ் சினிமாவில் பெரியளவில் எந்த ஒரு நெகட்டிவ் கதாபாத்திரங்களும் பேசப்படவில்லை. அதன்பின்பு, மங்காத்தா படத்தில் அஜித் நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வில்லத்தனத்திலும், நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் அஜித் அசத்தியிருப்பது அந்த படத்திற்கு பலனாக அமைந்தது.


அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, சஞ்சய் தத்:




அதன்பின்பு, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமியின் கதாபாத்திரமான சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் அந்த படத்திற்கே தூணாக மாறியது. படத்தில் ஜெயம் ரவியை காட்டிலும் சித்தார்த் அபிமன்யுவின் காட்சிகள் ரசிகர்களை வசீகரித்தது. அதுவே அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அரவிந்த் சாமிக்கு மிகப்பெரிய கம்பேக்கை அளித்தது. விக்ரம் வேதா படத்தில் வேதா எனும் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு விஜய்சேதுபதிக்கு வில்லன் மற்றும் வித்தியாசமான வேடங்களில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தெலுங்கில் வெளியான உப்பனா படத்தில் வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார்.


இதுபோன்று பல வெற்றிப்படங்களில் வில்லன் மற்றும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் ஹீரோ நடிகர்களே அசத்தி அந்த படத்தை வெற்றி பெற வைத்தது மற்ற நடிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, கே.ஜி.எஃப். 2ம் பாகத்திற்கு வில்லனாக சஞ்சய் தத் அதிரா கதாபாத்திரத்தில் நடித்து படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்தார். பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பல்வாள் தேவனாக ராணா வலுவான வில்லனாக நடித்தது முக்கிய காரணம் ஆகும்.


ரசிகர்களை கவரும் கேமியோ:


வில்லன் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கேமியோ கதாபாத்திரங்களும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் இடம்பெறும் ரோலக்ஸ் கதாபாத்திரமே ஆகும். அதுவரை படத்தை கமல், பஹத், விஜய் சேதுபதி தாங்கிப்பிடிக்க கடைசி 5 நிமிடத்தில் வந்து ரசிகர்களை தன்னைப் பற்றி யோசிக்க வைத்திருப்பார் சூர்யா.




சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்ததன் மூலம் சிவராஜ்குமார் தமிழ்நாட்டில் மிக பிரபலமான நடிகராக உருவெடுத்துள்ளார்.


நடிகர்கள் ஆர்வம்


படங்களில் நாயகனாக நடிப்பவர்களை காட்டிலும் வில்லத்தனத்திலும், நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களையும் மக்கள் அதிகளவில் நேசிக்கத் தொடங்கியிருப்பதால் ஹீரோக்களே இப்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரசன்னா, சிபிராஜ், அஜ்மல், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி என அந்த பட்டியலும் மிகப்பெரியதாக உள்ளது.


தமிழ் திரையுலகம் தற்போது வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிகளவில் அழைப்பது பஹத் பாசிலையே ஆகும். மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோவான பஹத் விக்ரம், மாமன்னன் பட வெற்றிக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


நெகட்டிவிட்டி, வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் தங்களுக்கு பாசிட்டிவான எதிர்காலம் அமையும் என கருதும் ஹீரோக்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா?  என்பதை அந்தந்த கதாபாத்திரங்களே முடிவு செய்யும்.