இப்போதெல்லாம் நமக்கு ஒரு படம் பிடித்து அந்த மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்காக சண்டைபோட்டு வாதாடுகிறோம். பெரிய அளவில் வெளியே தெரியாமல், நமக்கு பிடித்த ஒரு படத்தை யாரோ ஒரு அந்நியர் தனக்கும் அந்தப் படம் பிடிக்கும் என்று சொல்லும்போது வரும் ஒரு மகிழ்ச்சி இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அப்படியான ஒரு படம்தான் ‘ஒரு நாள் ஒரு கனவு’. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகின்றன.
ஒரு நல்ல கதை
சின்ன வயதில் இருந்தே உழைத்து மட்டுமே பழகி உழைப்பை மட்டுமே நேசித்துப் பழகி தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்ட ஒரு கதாநாயகன் (ஸ்ரீகாந்த்). வாழ்க்கையில் எல்லா வசதிகளும் கிடைத்தும் எந்த விதமான உறவுகளின் பாசமும் கிடைக்காத ஒரு கதாநாயகி சோனியா அகர்வால்) . இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் வருகிறதென்றால் அதில் என்ன என்ன பிரச்னைகள் எல்லாம் வரும் என்பதை மிக நேர்மையாக மிக எதார்த்தமான சொல்லியிருப்பார் இயக்குநர் ஃபாசில்.
இரு வேறு வாழ்க்கைச் சூழலில் வளர்ந்த இந்த இருவரும் தங்களது உணர்வுகளுக்கு நியாயமாக சண்டை போடுபவர்களாக இருக்கிறார்கள். தனது லட்சியத்தில் ஜெயிக்க தடையாக இந்தக் காதல் வந்துவிடுமோ என்கிற பயத்தில் நாயகனும், இவனைப் போன்ற ஒருவனின் குடும்பத்தில் தனக்கும் ஒரு இடம் கிடைக்காதா என்கிற ஏக்கத்தில் நாயகியும் என இருதரப்பினரின் நியாயங்களையும் திரைக்கதையில் சேர்த்திருப்பார் இயக்குநர்.
மற்றுமொரு கூடுதலான தகவல் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது. “கஜூராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே...”, “காற்றில் வரும் கீதமே...” என ரசிக்கும்படியான மெட்டுக்களில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் டிவியில் ஒலிக்கும்போது இன்றும் நம்மை சேனலை மாற்ற விடாது. கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வால் தன் மென்சோக முகம் காட்டி இக்கதையில் நன்றாக பொருந்தியிருப்பார். அதேபோல் இயல்பாக குழந்தை சுபாவம் கூடிய ஒரு வாலிபனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தியிருந்தார்
18 ஆண்டுகள் கழித்து நினைவுபடுத்திச் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய படம் இல்லையென்றாலும் இன்னும் கொஞ்சம் பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நாம் தான். அதனால் இனிமேல் நமக்கு ஒரு படம் பிடித்து அது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே சண்டை செய்வோம்.