தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், ரீமேக் படமாக வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆன, எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்தது.
சில தோல்வி படங்களில் இவர் நடித்தாலும்... அது ஜெயம் ரவியின் கேரியரையோ அல்லது வளர்ச்சியையே அதிகம் பாதிக்கவில்லை. முன்னணி நடிகராக இருக்கும் போதே தன்னுடைய காதலி ஆர்த்தியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திரையுலகமே வியக்கும் விதத்தில் பிரமாண்டமாக நடந்தது.
சுமார் 15 வருடங்களுக்கு மேல் மனைவி ஆர்த்தியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ரவி மோகன், இந்த ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும் தன்னுடைய பெயரையும் இனி ரசிகர்கள் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும், ரவி மோகன் என மாற்றி கொண்டதாகவும் அறிவித்தார். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ள ரவி மோகன், கூடிய விரைவில் இயக்குனராகவும் - தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் நடந்த பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில், ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இதன் பின்னர் ஆக்ரோஷமாக மாறிய ஆர்த்தி, ரவி மோகனுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில்... ரவி மோகன் தரப்பில் இருந்தும் பதில் அறிக்கை வெளியிடப்பட்டது. மாறி மாறி இருதரப்புக்கும் நடந்த அறிக்கை மோதல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவகாரம் பற்றி பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் தான் பிரபல பாடகி சுசித்ரா ரவி மோகன் மற்றும் கெனிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து... ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமாரை விம்சிக்கும் விதத்தில் பேசி வந்தார். இதுகுறித்து ஆர்த்தியின் தந்தை விஜயகுமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, “சுசித்ராவின் இந்த ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் எனது மகள் ஆர்த்தி மற்றும் மனைவி சுஜாதாவின் கண்ணியத்தையும், தனியுரிமையையும் பாதிக்கிறது. மேலும், எனது குடும்பம் மற்றும் என்னைப் பற்றிய அவரது வீடியோக்கள் மற்றும் பதிவுகள் தமிழ் திரைப்படத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் நாங்கள் நிலைநிறுத்தும் கண்ணியத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. பல தசாப்தங்களாக கடின உழைப்பால் நாங்கள் சம்பாதித்த எங்கள் குடும்பத்தின் கண்ணியத்தையும், நற்பெயரையும் சுசித்ரா ஒரு கணம் அவதூறு செய்துள்ளார். அவரது செயல்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 79, 294, 353 BNS, 66 (a) மற்றும் 67 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என கூறியுள்ளார். விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.