இயக்குநர் ராஜராஜதுரை இயக்கியிருக்கும் படம் ‘முதல் மனிதன்’. உசேன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கௌசல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, “ சாதியை வைத்து இப்போது அனைவரும் பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரு சாதியை உயர்த்தி இன்னொரு சாதியைத் தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தைத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கக் கூடாது. சினிமாவில் யார் சாதியைப் பார்த்து பழகுகிறார்கள். அனைவருமே நண்பர்களாக இருக்கிறார்கள்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள் மூன்று பேர். நான் சினிமாவுக்கு வர காரணமான யூசுப், குருநாதர் ராமநாராயணன் சார் மற்றும் நான் வெளியே தெரிவதற்குக் காரணமான தளபதி விஜய் சார். அவர் விஜய்யாகத்தான் இருந்தார், அவரை இடையில் ஜோசப் விஜய் ஆக மாற்றிவிட்டார்கள். அவர் தன்னை கிறிஸ்துவராக நினைக்க மாட்டார். அவரும் நானும் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்றுள்ளோம். அவருக்கு அனைத்து மதமும் ஒன்றுதான். நாம்தான் அவரை கிறிஸ்துவராகப் பார்க்கிறோம்.
நண்பன் முஸ்லிம், குருநாதர் இந்து, வாய்ப்பு கொடுத்தவர் கிறிஸ்துவர். இவர்கள் யாருமே என் மதத்தைப் பார்த்து வாய்ப்புக் கொடுக்கவில்லை. மனிதனாகப் பார்த்தார்கள். ஆகையால் சினிமாவில் சாதியும் இல்லை, மதமும் இல்லை. சினிமாவில் சாதியை வளர்ப்பவர்களை அழித்துவிட வேண்டும். அனைவருக்கும் பொதுவானது சினிமா. இந்த முதல் மனிதன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி" என்றார்.
முன்னதாக மெர்சல் திரைப்படம் வெளியான சமயத்தில் விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குநர் பேரரசு பாஜகவை சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Koozhangal | மகிழ்ச்சியான தருணம்.. வாழ்த்தும் திரையுலகம்.. குஷியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா!
AR Rahman on Iravin Nizhal: உதாரண படம் - பார்த்திபனின் புதுப்படத்தைப் பாராட்டிய ஏ.ஆர். ரஹ்மான்..