பெங்களூரில் பிறந்த பிரியாமணி பள்ளிப் பருவத்திலேயே பல பட்டுப்புடவை விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்தார் பிரியாமணி. அந்நிலையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் 'Evare Atagaadu' என்ற தெலுங்கு திரைப்படம். அதன் பிறகு கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த திரைப்படம் பிரபல மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்களால் கைது செய் படத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த பிரியாமணி அமீர் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் பருத்திவீரன். இந்த படத்தில் பிரியாமணி தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கைதட்டவும், கண்கலங்கவும் வைத்தது. நடிகர் கார்த்தி, நடிகர் சரவணன், நடிகை பிரியாமணி என்று பலருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் பருத்திவீரன். இந்த படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 18 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் பிரியாமணி, முஸ்தபா ராஜ் என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிடும் நிலையில் பிரியாமணி திருமணத்திற்கு பிறகும் தற்போது வரை பல படங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக 'Ateet' என்ற பாலிவுட் படத்தில் நடித்ததற்கு பிறகு தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் 7-க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகின்றார் பிரியாமணி.
Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா
இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் போன்ற முன்னனி நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார்கள். ஆகையால் திருமணத்திற்கு பிறகு நடிப்பது என்பது எனக்கு கடினமாக இல்லை. மேலும் என் கணவரும் என்னுடைய சினிமா பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றார். திருமணம் ஆன பிறகு பட வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஆனால் சிலர் நான் கருப்பாக இருக்கிறேன், குண்டாக இருக்கிறேன் எனக்கு வயதாகிவிட்டது என்று கேலி பேசி வருவது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. சினிமாவிற்கு நிறம், உருவம் மற்றும் வயது என்பதை தாண்டி திறமைதான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை பிரியாமணி.