நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா நடிப்பில் இவ்வாண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் டெடி. நடிகர் ஆர்யா கேரளாவில் பிறந்தவர் என்றபோதும் தனது பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். Astro Physics பாடத்தில் மிகவும் ஆர்வம் மிக்கவராக திகழ்ந்த ஆர்யா மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். நடிப்பின் மீது அவர் கொண்ட ஆர்வத்தால் அவ்வப்போது நடக்கும் சினிமா ஆடிஷன்களில் கலந்து கொண்டார். 


அதன் மூலம் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே என்ற திரைப்படம். பிரபல நடிகை அசின் அறிமுகமானதும் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படமே ஆர்யாவை முதலில் திரையில் அறிமுகம் செய்தது. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான Film Fare விருதை ஆர்யா பெற்றார். அதை தொடர்ந்து பட்டியல், ஓரம் போ, வட்டாரம் போன்ற படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினர் நடிகர் ஆர்யா.     






பாலாவின் நான் கடவுள் மற்றும் அவன் இவன், ஏ.எல் விஜயின் மதராசபட்டினம் போன்ற படங்களில் நடித்து கோலிவுட் உலகின் முன்னணி நடிகராக பலரின் டார்லிங்காக திகழ்கின்றார் ஆர்யா. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்து வருகின்றார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 மற்றும் தனது நண்பர் விஷாலுடன் எனிமி போன்ற படங்களிலும் நடித்து வருகின்றார். 


சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!


இந்நிலையில் 2021ம் ஆண்டு OTTயில் வெளியான ஆர்யாவின் டெடி திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக குழந்தைகளை டெடி திரைப்படம் மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் இமான் இசையில் வெளியான இந்த படத்தில் பாடல்களும் பலரை முணுமுணுக்க வைத்தது. இந்நிலையில் டெடி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்யா. அதில் 'சவுத் இந்தியன் கிறிஸ்டோபர் நோலன் டெடி 2 படத்திற்கான கதைக்களத்தை உருவாக்கி வருவதாகவும், அதில் நடிக்க தான் ஆர்வமாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.