மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாடகச்சேரி கிராமத்தில் செல்லும் நண்டலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவீரன் வன்னியர் சங்கம் தலைவர் வி.ஜி.கே.மணி தலைமையில்  பொதுமக்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களை நோக்கி வருவதை அறிந்து மணல் அல்ல பயன்படுத்திய வாகனங்களை விட்டு விட்டு மணல் அள்ளியவர்கள் தப்பி சென்றுள்ளனர். பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்று மணலை எடுத்து ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு அதனை லாரிகள் மூலம் அள்ளப்பட்டு வருவது தெரியவந்தது. 




அதனையடுத்து உடனடியாக அங்கு  மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை கிராம மக்கள் பறிமுதல் செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பாழையூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட அந்த வாகனங்கள் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜூக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 




இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.கே மணி கூறுகையில், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி அரசு ஒப்பந்த வேலைகள் செய்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் தற்போது பொதுமக்கள் லாரிகளையும் ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஒப்படைத்தாகவும், இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.




மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், தொடர்ச்சியாக பத்தாண்டு காலம் ஆளும் கட்சியின் பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பவுன்ராஜ் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி 10 ஆண்டுகளாக தனது உறவினர்கள் பெயரில் அரசு ஒப்பந்த கட்டிட பணிகள், சாலைப் பணிகளை டெண்டர் எடுத்து, அப்பணிகளுக்குத் தேவையான மணலுக்காக, பல்வேறு இடங்களில் முறைகேடாக குவாரி அமைத்து அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் கூடுதல் ஆழத்திற்கு மணல் எடுத்து வந்ததாகவும், பத்தாண்டு கால ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பலமுறை பொதுமக்கள் கிராம அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் என அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்காத இடம் இல்லை என்றும், ஆனால் அளிக்கப்பட்ட புகார்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள்,




 


இனி அரசு அதிகாரிகளையும், காவல் துறையும் நம்பி பயனில்லை என்று தாங்களாகவே மணல் திருட்டை தட்டிக்கேட்க இறங்கி தற்போது மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த உள்ளோம். காவல்துறையினர் கண்துடைப்புக்காக வேறு யார் மீதாவது வழக்கை பதிவு செய்து உரிய குற்றவாளிகளை தப்பிக்க விடாமல், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.