இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜவான்’ படத்தில் விஜய் பட நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள அட்லீ, இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அட்லீ இயக்கத்தில் முதல் படமாக ஜவான் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஷாருக்கான், நயன்தாரா, யோகிபாபு, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தி,தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன்மூலம் நேரடியாக இந்தியில் அனிருத் அறிமுகமாகியுள்ளார். 


இதனிடையே இன்று வெளியான ஜவான் படம் இந்தி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் தமிழில் படம் பார்க்க சென்ற ரசிகர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தன்னுடைய படங்கள், நடிகர் விஜய்யின் மேனரிசங்கள் என அனைத்தையும் கலந்து கட்டி ஜவான் படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். அட்லீ பிற படங்களை காப்பியடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தாலும், இது இன்ஸ்பிரேஷன் என பலரும் அட்லீக்கு சப்போர்ட் செய்ததே அதிகமாக இருந்தது.




ஆனால் அப்படி அட்லீக்கு சப்போர்ட் செய்தவர்களை இந்த படம் டென்ஷன் பண்ணியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் ஜவான் படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் அனிருத் மியூசிக் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆனாலும் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வசூல் வேட்டை நிகழ்த்தும் என ஷாருக் ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். இப்படியான நிலையில் ஜவான் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார். 


அவர் வேறு யாருமல்ல.. சஞ்சய் தத் தான். அவர் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு ரோலில் வருவார். அவருக்கு தமிழில் நடிகர் சம்பத் குமார் டப்பிங் கொடுத்துள்ளார். இதேபோல் படத்தில் வரும் ஒரு அரசியல்வாதி கேரக்டருக்கு விடிவி கணேஷ் டப்பிங் பேசியுள்ளார். எனினும் லியோ படத்தில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் ஆக மிரட்டுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு முன் ஜவான் படத்தில் அவர் கேமியோ ரோலில் வந்தது சர்ப்ரைஸ் தான் என ரசிகர்கள் சிலாகித்துள்ளனர். 




மேலும் படிக்க: Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!