Jawan Movie Review in Tamil: ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘ஜவான்’.(Jawan) இந்த படத்தில்  ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பாலிவுட், கோலிவுட் திரையிலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படம் விமர்சனத்தை காணலாம். 


ஜவான் படத்தின் கதை 


இயக்குனர் ஷங்கர் படம் தொடங்கி ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், விஜய் மேனரிசம் ஆகிய அனைத்தையும் தூசு தட்டி  பாலிவுட் திரையுலகின் ரசிகர்களுக்கு மட்டும் விருந்து படைத்துள்ளார் அட்லீ.


இந்திய எல்லையில் கதை தொடங்குகிறது. குற்றுயிராக மீட்கப்பட்டு ஊர் மக்களால் காப்பாற்றப்படுகிறார் ஷாருக்கான். உயிர் பிழைத்து வரும் அவர் தான் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறார். ( ஆமா... யாருப்பா நீ.. என்ற கேள்வி ரசிகர்களுக்கும் எழுகிறது)


அப்படியே 30 ஆண்டுகளுக்கு பிறகு என்ற டைட்டில் போட்டு  தற்போதைய காலத்தில்  கதை தொடங்குகிறது. இந்த பக்கம் ஷாருக்கான் அவருடன் சேர்ந்த 6 பெண்கள் அடுத்தடுத்து அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாத்தாக்களாக மாறுகின்றனர். தங்கள் தேவைகளாக மக்களுக்கு அவசியமானதை கேட்கிறார்கள். இதனையெல்லாம் அரசாங்கமே செய்ய மறுக்கும் நிலையில் இதையெல்லாம் என்ன ஏதேன்று கேட்காமல் அசால்ட்டாக வில்லன் விஜய் சேதுபதி செய்கிறார்.


இதனிடையே ஷாருக் கூட்டத்தை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வரும் நிலையில், குற்றவாளி ஷாருக் தான் என தெரிய வருவதற்குள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்த அன்று நடந்ததை சொல்ல ஷாருக் வர, அதற்குள் உண்மை தெரிந்து அவரை நோக்கி நயன்தாரா துப்பாக்கியை நீட்ட, அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக வில்லன் கூட்டத்தால் தாக்கப்படுகிறார்கள்.  அங்கு ஷாருக்கை காப்பாற்ற வருகை தருவார் இன்னொரு ஷாருக்கான்.  இதன்பின்னர் இந்த இரண்டு ஷாருக்கான்கள் யார்?.. விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை 3 மணி நேரமாக படமாக கொடுத்திருக்கிறார் அட்லீ.


(அட்லீ எடுத்த ஒரு  தமிழ் படத்தை ரீ- வெர்ஷனில் பார்ப்பது போல தான் இருக்கும்..பதட்டப்பட வேணாம்)


நடிப்பு எப்படி?


ஜவான் விக்ரம் ரத்தோர், போலீஸ் அதிகாரி ஆஸாத் என இரண்டு வேடங்களில் நடித்த நிலையில், அவற்றிற்கு வித்தியாசம் காட்ட முயற்சித்து இருக்கிறார் ஷாருக்கான். அவரின் நடிப்பு, டான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும்  பொருந்தி போகிறது. குறிப்பாக பல இடங்களில் நடிகர் விஜய்யின் மேனரிசத்தை அப்படியே பின்பற்றுகிறார் (ரசிகர்களே சம்பந்தப்பட்ட அந்த விஜய் படங்களின் பெயர்களை சொல்வதை கேட்க முடிகிறது). அதேசமயம் நடிப்பில் மட்டுமல்லாது ஆக்ஷனிலும் ஷாருக்கானுக்கு இணையாக மிரட்டியுள்ளார் நயன்தாரா. ஷாருக் - நயன் 


பார்வையால், நடிப்பால், வசனத்தால் ஆங்காங்கே வில்லத்தனம் காட்டியுள்ளார் விஜய் சேதுபதி. அதிகாரத்தை கையில் எடுப்பது, பிரச்சினை வரும்போது டீல் பேசாமல் சம்பவம் செய்வது என பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் குறைவில்லாமல் கேரக்டரை செய்திருக்கிறார்கள். 


ஜவான் படம் எப்படி?


பொதுவாக அட்லீ படம் என்றாலே பல படங்களின் இன்ஸ்பிரேஷன் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் அவர் தமிழில் எடுத்த படங்களும், அவருக்கு பிடித்தமான விஜய் படங்களும்  இருக்கும் என்பதை படம் பார்த்திருக்க சென்ற ரசிகர்கள் கண்டிப்பாக  எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இடைவேளை வரை நன்றாக செல்லும் கதை  அதன்பிறகு எங்கே போகிறது என தெரியாமல் நகர்கிறது.


கிளைமேக்ஸ் உட்பட பல காட்சிகள் "கண்ணாடியை திருப்புனா எப்பிடிப்பா ஆட்டோ ஓடும்" என்ற ரகமாக செல்கிறது. காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யம் கொஞ்சமாது கதையில் இருந்திருக்கலாம். விரைந்து முடிக்க கூடிய கதையை இழுஇழுவென்று இழுத்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்கள். படத்தில் ஜெயில் என்ற ஒரு இடம் காட்டப்படுகிறது. அது ஜெயிலா இல்ல டான்ஸ் ஸ்கூலா என கேள்வி எழும் அளவுக்கு அங்கு கைதிகள் செம ஜாலியாக இருக்கிறார்கள். படத்தில் 4 பிளாஸ்பேக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. 


படத்தில் குண்டுகள் எல்லாம் ஆங்காங்கே வெடிக்கிறது. ஆனால் யாருக்குமே பெரிதாக எதுவும் ஆகவில்லை. இதேபோல் லாஜிக் பார்க்கக்கூடாது என போர்டு வைக்கும் அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் சூப்பராக அமைந்துள்ளது. குறிப்பாக அந்த பைக் சேஸிங் காட்சி அட்டகாசமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அழுத்தமில்லாத, யூகிக்க கூடிய காட்சிகளை அடுக்கி ஜவான் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை.


படத்திற்கு பெரும் பலம் அனிருத்தின் இசை மற்றும் விஷ்ணுவின் கேமரா மட்டும் தான். ஆக மொத்தத்தில் பீஸ் இல்லாமல் பிரியாணி வைப்பது போல ஒரு படத்தை அட்லீ அண்ட் கோ கொடுத்திருக்கிறார்கள்.


பின்குறிப்பு :   படம் பார்க்க செல்பவர்கள் இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வுடன் சென்று மிகுந்த பொறுமையுடன் பார்க்கவும்.