ஆந்திரா சட்னி, ஆந்திரா  கோங்குரா பச்சடி, ஆந்திரா பருப்புப் பொடி, ஆந்திரா லட்டு... இதெல்லாம்
எப்படி பிடிக்கிறதோ... அப்படி தான் தமிழ் சினிமாவின் ஆந்திரா வரவுகளும். அப்படி ஒருவர் தான் பிந்து மாதவி. ஆந்திராவின் மதனப்பள்ளியில் 1986 ஜூன் 14 இன்றைய தினத்தில் பிறந்தவர். இன்று 35வது பிறந்தநாள் காணும் பிந்து மாதவி, காதல், பாசம், சிரிப்பு, சோகம் என எல்லா ஜானரிலும் கலக்கியவர் நடிகையாக இருந்தாலும் பிக்பாஸ் போட்டியாளாக சமீபத்தில் அறியப்படுபவர். 


இன்ஜினியர் நடிகையான கதை...!


தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிந்து மாதிரியான நடிகைகள் வந்து செல்வார்கள். குறிப்பிட்ட சில படங்களில் நடித்து, தனக்கான இடத்தை தக்க வைப்பார்கள். அப்படி தான் பிந்துவும். ஒரே நேரத்தில் படங்கள் கொட்டிய சமயம் அது. எந்த படத்தில் பார்த்தாலும் பிந்து பெயர் இருக்கும். பிறந்தது ஆந்திரா என்றாலும், படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னை என்பதால், பிந்துவுக்கு சரளமாக தமிழ் வரும். வேலூர் ஐஐடியில் படித்தவர். நல்ல படிப்பு இருந்தாலும், நடிப்பில் ஆர்வம் இருந்ததால் இன்ஜினியர், நடிகையானார். 2008 ம் ஆண்டு பொக்கிஷம் திரைப்படத்தில் அறிமுகமான பிந்து மாதவி, பட்ஜெட் தயாரிப்பாளர்களின் பேவரிட். முதல் படம் தமிழில் அறிமுகம் என்றாலும், அடுத்து தமிழில் வர 5 தெலுங்கு படங்களை கடக்க வேண்டியிருந்தது. 2011ல் வெப்பம் படத்தில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பிந்து, பெரிய ஹிட் கொடுக்க காத்திருந்தார்.




நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஜாக்பாட்!


சினிமாவில் வாய்ப்பு தவம் என்றால், ஹிட் வரம் என்பார்கள். அப்படி ஒரு ஹிட் படம் கிடைக்க, பிந்து மாதவிக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. 2012ல் கழுகு வெளியானது. அதுவரை அறியப்படாத பிந்து, பின்னர் கழுகு பிந்து என்றே அறியப்பட்டார். உடை, நடை என அப்படியே மலைவாழ் பெண்ணாக தன்னை மாற்றி, கழுகு ஹிட்டுக்கு பெரிய அளவில் உதவினார். இன்னும் சொல்ல வேண்டுமானால், அவரது கதாபாத்திரம் தான் படத்தின் கருவே. இப்போது நிரூபித்தாகிவிட்டது. இனி, கவனமாக படங்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம். ரொம்ப சீரியஸாகவும் போக முடியாது. கவர்ச்சியும் தேவைக்கு அதிகமாக எடுபடாது. கமர்ஷியல் தான் சரியான வழி என்கிற சரியான பாதையை தேர்வு செய்தார். 




பிந்துவின் அதிர்ஷ்டக்கார 2013!


2013 ம் ஆண்டு பிந்துவுக்கு ஜாக்பாட் ஆண்டு என்றே சொல்லலாம். கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து ஹிட் படங்கள். அத்தனையும் கலகலப்பான காமெடி கமர்ஷியல் படங்கள். அதிலும் தேசிங்கு ராஜா, இன்றும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம். முழுநீள நகைச்சுவை படத்தில் தாமரை கேரக்டரில் கலக்கியிருப்பார் பிந்து. பீக் நடிகையாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்து, அதிலும் சர்சைகள் இன்றி நல்ல பெயருடன் வெளியே வந்தார். தினத்தந்தியின் அட்டை படங்களை அதிகம் அலங்கரித்தவர்களில் பிந்துவுக்கு தனி இடம் உண்டு. அவரது பார்வையும், கன்னத்தில் விழும் குழியும் அவருடைய அடையாளமாகவும், பிறரையும் கவர்வதாகவும் அமைந்தது. 2013 மாதிரியான அதிர்ஷ்ட ஆண்டுகள் அதன் பின் வரவில்லை என்றாலும், அவருக்கான படங்கள், அவரை தேடி சென்று கொண்டு தான் இருக்கிறது. இன்னும் நிறைய வாய்ப்புகள் பெற்று, கன்னக்குழி அழகி பிந்து மாதவி இன்னும் அழகாய் சிரித்து வாழ வாழ்த்துகிறது ABP நாடு!


சுவாரஸ்யமான செய்திகளுக்கு: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!