டென்னிஸ் விளையாட்டில் முக்கியமான கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று பிரஞ்சு ஓபன். களிமண் தரையில் நடத்தப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவாகும். இந்தாண்டு கொரோனா பரவல் சற்று குறைந்தப் பிறகு நடத்தப்பட்ட முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் தரவரிசையில் 5-ஆம் நிலை வீரரான கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் மோதினர். 




தொடக்கம் முதலே இந்தப் போட்டி சிறப்பாக அமைந்தது. குறிப்பாக முதல் செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி கேம்களை வென்று வந்தனர். இதனால் முதல் செட் டைபிரேக்கருக்கு  சென்றது. இதில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 7-6 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். சுமார் 72 நிமிடங்கள் இந்த முதல் செட் நடைபெற்றது. அதன்பின்னர் இரண்டாவது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் 6-2 என்ற கணக்கில் 31 நிமிடங்களில் செட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக 2-0 என்ற கணக்கில் போட்டியில் சிட்சிபாஸ் முன்னிலை பெற்று இருந்தார். இதன் பின்னர் முதல்நிலை வீரர் ஜோகோவிச் சுதாரித்து கொண்டு ஆட தொடங்கினார். 




மூன்றாவது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 6-3 என்ற கணக்கில் 53 நிமிடங்களில் செட்டை வென்றார். இந்தச் செட்டிற்கு பிறகு சிட்சிபாஸ் சிறிது நேரம் பிசியோவிடம் தனது முதுகு வலிக்கு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் நான்காவது செட் தொடங்கியது. இதிலும் தொடக்கம் முதலே ஜோகோவிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் விரைவாக 4 கேம்களை வென்றார். அதன்பின்னர் சிட்சிபாஸ் 2 கேம்களை வென்றாலும் 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் செட்டை 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் வென்றார். இருவரும் தலா 2 செட்களை வென்று இருந்ததால் சாம்பியனை முடிவு செய்ய 5ஆவது மற்றும் கடைசி செட் நடத்தப்பட்டது. 




வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் ஜோகோவிச் மற்றும் சிட்சிபாஸ் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இறுதியில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் 6-7,2-6,6-3,6-2,6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி தனது 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வென்றார். அத்துடன் 52 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களையும் இரண்டு முறை வென்ற மூன்றாவது ஆடவர் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக ராய் எமர்சென் மற்றும் ராட் லெவர் ஆகியோருக்கு பிறகு இந்தச் சாதனையை இவர் படைத்துள்ளார். ராட் லெவர் கடைசியாக 1969ஆம் ஆண்டு இந்தச் சாதனையை படைத்தார். 


 






மேலும் பிரஞ்சு ஓபன் வரலாற்றில் நடாலை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக கடந்த இரண்டு முறை பிரஞ்சு ஓபன் தொடரில் நடாலை வீழ்த்தியவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. 2009-ஆம் ஆண்டு  ராபின் சோடர்லிங் ரஃபேல் நடாலை வீழ்த்தியிருந்தார். ஆனால் அந்த ஆண்டு பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார். அதேபோல் 2015ஆம் ஆண்டு ஜோகோவிச் நடாலை வீழ்த்தி இருந்தார். அப்போதும் வாவ்ரிங்கா சாம்பியன் படத்தை வென்று இருந்தார். இம்முறை அரையிறுதிப் போட்டியில் ரஃபேல் நடாலை ஜோகோவிச் தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?