இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று இன்றளவும் புகழப்படுபவர் தான் பாக்கியராஜ். இவர் சினிமாவில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், என்று பன்முகம் கொண்டவர். இவரது படங்களுக்கு என்று தனி கூட்டமே உண்டு. சிறிய கதை களத்தை எடுத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான காட்சிகளை நகர்த்தி செல்வதில் வல்லவர்.
பாக்யராஜ்
அந்த காலத்தில் இருந்தே இவரது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவுபடுத்தியதே இல்லை. சமீபத்தில் கூட அவரை பாஜககாரர் என்று கூறி ஒரு சர்ச்சை எழுந்தபோது அதனை மறுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இவர் அந்த காலத்தில் எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர். ஆனாலும் அதிமுக என்று எப்போதுமே சொல்லியதில்லை. இது குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை சமீபத்தில் நடந்த முதல்வர் தலைமை தாங்கிய ஒரு விழாவில் நடிகர் பாக்யராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கலைஞர் உடனான உறவு
அந்த நிகழ்வில் பேசிய பாக்யராஜ் தனக்கும் கலைஞருக்கும் ஆன உறவை பற்றி கூறினார். அவர் பேசுகையில், "நான் அந்த நேரத்தில் எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்தேன். எம்ஜிஆர் நடிக்க இருந்த டிராப் ஆன படத்தின் ரைட்ஸை எனக்கு எம்ஜிஆர் கொடுத்தார். அந்த அளவுக்கு செல்ல பிள்ளை நான் அவருக்கு. அதனால் எல்லோருமே என்னை கலைஞருக்கு எதிரானவனாக பார்த்தார்கள். என்னை அதிமுககாரராக பார்த்தார்கள். ஆனால் அந்த காலத்தில் கலைஞர் எழுதிய திரைப்படங்களில் எம்ஜிஆர் நடித்திருந்தார்" என்று கூறினார்.
ஸ்டாலின் பண்பு
மேலும் பேசிய அவர், "இப்படியே நான் அதிமுக என்று பலர் கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், ஒரு சம்பவம் நடந்தது. அறிவாலயம் கட்டுவதற்கு வீடு வீடாக நிதி கேட்டு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அப்போது அருகில் இருப்பவர்கள் என்னைப் பற்றி நான் அதிமுககாரன் இவன் கிட்ட வாங்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். அதற்கு ஸ்டாலின், இப்படியெல்லாம் செய்யக்கூடாது தப்பு, எல்லா வீட்லயும் கேட்டுட்டோம், இவரு வீட்ல மட்டும் கேட்காம போறது நல்லாருக்காதுன்னு சொல்லி வீட்டுக்கு வந்தார்" என்றார்.
எம்ஜிஆர் கூறியது
வீட்டிற்கு வந்து அறிவாலயம் காட்டுவதற்கான நிதி கேட்டபோது ஒரு பெரிய தொகை கொடுத்ததாக கூறிய அவர், "நான் ஒரு அமௌண்ட் கொடுத்தேன்னு விஷயம் தோட்டத்துக்கு போயிருச்சு. என்னாக போகுதோன்னு பயந்துட்டு இருக்கேன். கட்சிக்காரங்க எல்லாரும் என்ன காரியம் பண்ணிருக்கான் பாரு, அந்த கட்சிக்கு போய் கொடுக்கலாமான்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. எம்ஜிஆர் கிட்ட இருந்து ஃபோன் வருது, 'நல்ல காரியம் செஞ்ச', என்கிறார். நம்மை தேடி வருபவர்களிடம் நாம் கொடுப்பது தான் நல்ல செயல்ன்னு சொன்னாரு" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News-இல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்