இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம்தான் தற்போது இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பிற்கு சிறிதளவு தீனி போடும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது.


தற்போது வரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கும் இந்தப்பாடல் இப்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் அதன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனிடம் பாடல் உருவாக்கம், வரவேற்புடன் சேர்ந்து வந்த விமர்சனங்கள், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானிடம் வேலை பார்த்த அனுபவம் உள்ளிட்ட பலவை குறித்து பேசினேன். 


 


                                   


ஒரு எழுத்தாளனுக்கு திரை வெளிச்சம் என்பது எவ்வளவு முக்கியம் எனறு நினைக்கிறீர்கள்?


எழுத்தாளன் மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனா இருந்தாலும், தனது படைப்புக்கான முறையான அங்கீகாரம் கிடைக்கணும், அந்த படைப்பு கொண்டாடப்படணும் அப்படின்னுதான் விரும்புவான். அதே நேரம் அதுல கிடைக்கக்கூடிய அதீத புகழ் வெளிச்சம் சில நேரங்கள்ல அவனது சுதந்திரத்திற்கு இடையூறாவும் அமைஞ்சிரும்.




அதன் காரணமா, அவனால எப்போதும் போல எளிய மனிதர்களோட முகங்கள கிரகிக்க முடியிறதில்ல ஆனா, என்னை பொருத்தவரை நான் என்னோட எழுத்துகளை ஒரு பரந்த வாசக வட்டத்துக்கு கொண்டு போகணும்னு நினைச்சேன். அதுனுடைய வெளிப்பாடுதான் சினிமா. 


சமூகவலைதளங்களில் மணிரத்னம் டீமில் வைரமுத்துவுக்கான இடம் உங்களுக்கு கிடைச்சிருக்குன்னு சொல்லப்படுதே?


ரஹ்மான், மணிரத்னத்தோடு தொடக்கத்துல வேலை செய்யும்போது ஒரு தடுமாற்றம் இருந்துச்சு. அத புரிஞ்சிக்கிட்ட அவங்க எனக்கு பிரமாதமான கம்ஃபர்ட் ஸோனை உருவாக்கி கொடுத்தாங்க. எனக்காக வெயிட் பண்ணாங்க.  




அதன் காரணமா என்னால ரொம்ப ஈசியா வேலை செய்ய முடிஞ்சது. இங்க மணிசாரோட விஷன்தான் எல்லாமே. அவர் நம்மள கூப்பிட்டு இப்படியான பாட்டு வேணும்னு சொல்றாரு. நான் அவர் கேட்டத செஞ்சி கொடுத்தேன். அங்க வேற எதைப்பத்தி என்னால யோசிக்க முடியும் சொல்லுங்க. 


பொன்னி நதி பாடல் வாய்ப்பு எப்படி வந்தது? 


ஜெயமோகன் சார் மூலமாத்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. ஒரு புதன்கிழமை மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து அழைப்பு வந்துச்சு. ஒரு பாடல்தான் எழுதப்போறோம்னு நினைச்சு போனேன். ஆனா அங்க பல பாடல்களை எழுதக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைச்சது. 




பொன்னியின் செல்வன் நாவலை நான் பல தடவை படிச்சிருக்கேன். அதனால போகும் போதே சினிமா பாணியில, நவீன கவிதை வடிவத்துல அப்படின்னு, கொஞ்சம் பாடல் வரிகளை எழுதி எடுத்திட்டுதான் போயிருந்தேன். எல்லாத்தையும் பார்த்த மணி சார் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.




எங்களுக்கு 10 ஆம் நூற்றாண்டு கவிதைகள் தேவைப்படுது. உங்க வொர்க் எல்லாத்தையும் பாத்தோம். ரொம்ப நல்லாயிருக்குனு சொல்லி வொர்க் ஸ்டார்ட் பண்ணலாமா சொல்ல, அப்படியே வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டோம். 


ரஹ்மான் மணிரத்னம் கெமிஸ்ட்ரி இப்ப எப்படி இருக்கு?


அவங்க தொடர்ந்து வொர்க் பண்ணிக்கிட்டே இருக்காங்க. லாஸ்ட் மினிட் வரைக்கு வொர்க் பண்றாங்க.. எவ்வளவு முடியுமோ, அந்தளவுக்கு அந்த பாட்டுக்கு இன்புட் கொடுக்குறாங்க. மணி சார் ஒருபக்கம்  நல்ல கம்ஃபர்ட்டா வைச்சிருந்தாலும், நம்மளோட பெஸ்ட வெளிய எடுக்காம விடமாட்டாரு. 


சாங் முடிச்ச அடுத்த நாள் சாங் எப்படி வந்திருக்குன்னு கேட்டா நைஸ் லிரிக்ஸ்.. நல்லா வந்துருக்கு.. என்ன பண்ணப்போறோம்னு தெரியல பார்ப்போம் அப்படின்னு சொல்லுவாரு. அவர் அவ்வளவு தன்னடக்கமா இருக்குறத பார்த்தா ஆச்சரியமா இருக்கும். 




எங்கிட்ட ஒரு முறை அவர் பேசும்போது, இளங்கோ பழந்தமிழ் வரிகளை இன்னொரு முறை சினிமாவுல கொண்டு வர்றதுக்கான வாய்ப்பு எப்ப கிடைக்கும்னு நமக்கு தெரியாது. அதனால இந்த வாய்ப்ப நாம சரியா பயன்படுத்திக்கணும் விட்ற கூடாதுன்னு சொன்னார்.. நானும் அவர்கிட்ட விட்ற மாட்டேன் சார்னு சொன்னேன்.  அந்த சாங்க்ல ஏ.ஆர்.ரஹ்மான் சார் வாய்ஸ் ரஃப்பா கேக்கும் போது, இந்தப்பாட்ட ரஹ்மான் சாரே பாடுனா நல்லா இருக்கும்ல சார் அப்படின்னு மணிசார்ட்ட  கேட்டேன். அதை கேட்ட மணி சார் சிரிச்சிக்கிட்டே பார்க்கலாம்னு சொன்னார்.  கடைசி ரஹ்மான் சாரே பாடிட்டார். 


பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள்  பாடல் நவீனத்துவமா இருக்கிறதே என்று விமர்சனம் செய்கிறார்களே? 


வந்தியத்தேவன் உணர்வுகளை வெளிப்படுத்துற பாடல்தான்  ‘பொன்னி நதி’. இதற்கான மொழிய ஃபைனல் செய்யும்போது பேச்சுமொழியிலே பாட்டு இருக்கலாம் அப்படின்னு யோசிச்சோம். சரி, 10-ஆம் நூற்றாண்டு பேச்சு வழக்கு மொழியை பயன்படுத்தலாமானு டிஸ்கஸ் பண்ணோம். ஆனா அதை பயன்படுத்தும் போது, அந்த ஒலி மக்களுக்கு புரியாம போயிறக்கூடாதுன்னு தோணுச்சு. 






அதனால சமகால பேச்சு மொழியிலேயே எழுதிடலாம்னு முடிவெடுத்தோம். இன்னொரு விஷயம் ஒரு பாடல், ஒரு சூழல், என்ன கேக்குதோ அதைத்தான் நாம் தரணும். படத்தோட வேறு பாடல்கள்ல பழந்தமிழ் சொற்கள பயன்படுத்தி இருக்கிறோம். அதுவும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.  


நடிகர்கள் பாடலாசிரியர்களா மாறுறதை நீங்க எப்படி பார்க்கிறீங்க..? 


யார் வேண்டுமானாலும் பாட்டு எழுதலாம். ஆனால் அதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு. அந்தப்பாடலின் துவக்கம் நல்லா இருக்கா? கவித்துவம் சார்ந்த விஷயங்களை எந்தளவு அப்ளை பண்றாங்க. அந்த சூழலலுக்கு ஏத்தப்படி அந்தப்பாடல அவங்க எப்படி மெருகேற்றி கொண்டு போறாங்க போன்ற விஷயங்கள சரியா பார்த்துக்கிட்டா ஓகேதான். 


பாராட்டுகள் நிறைய வந்திருக்குமே? 


சின்ன வயசுல பழகிய நண்பர்கள், முகம் தெரியாத நண்பர்கள் பலர் பாராட்டினாங்க 


மணிசார்ட்ட இருந்து ஒரு மெசஜ் வந்துச்சு. அந்த மெசஜ்ல “ சாங் வைரல் ஆகிருச்சு இளங்கோ. வரிகள் ரொம்ப நல்லா இருக்கு  யூ ஆர் ராக்கிங்” னு இருந்துச்சு. அவரது பாராட்டு எனக்கும் ரொம்ப நிறைவா இருந்துச்சு” என்று பேசி மகிழ்ச்சியாக விடைபெற்றார் இளங்கோ.